Sat. Nov 23rd, 2024

மாங்கனி மாவட்டம் என அழைப்படும், சேலம் மையப்பகுதியில் இருந்து தெற்கே நீண்ட தொடரான ஜருகுமலை உள்ளது. இம்மலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். கூலி தொழிலுக்கும் பலர் சென்று வருகின்றனர். ஜருகுமலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் ஒரே கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இரு கட்டிடம் உள்ளது. ஒரு கட்டிடம் ஆஸ்பெட்டாஸ் கூரையாலும், மற்றொரு கட்டடம் காங்கீரிட் கட்டிடமாகவும் உள்ளது. இதில் ஆஸ்பெட்டாஸ் கூரையால் வேயப்பட்ட கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதேபோல் காங்கீரிட் கடடமும் மோசமாகி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு சமைக்க தனி கட்டிடம் இல்லை.

திறந்த வெளியில் தான் சத்துணவு சமைக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் இயற்கை உபாதையை போக்குவதற்கென கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை. மாணவ, மாணவிகள் மறைவான இடத்திற்கு சென்று தான் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர்.

எனவே இங்கு பழுதான கட்டிடத்தை இடித்துவிட்டு, புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் அல்லது விசாலமான இடத்தில் பெரிய அளவில் கட்டிடம், சமையல் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் காங்கீரிட் கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் தான் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தான் உள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கு மேல் மாணவ, மாணவிகள் படிக்க வேண்டும் என்றால் அடிவாரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியின் தரத்தை உயர்த்தி, பத்தாம் வகுப்பு வரை கொண்டு வரவேண்டும் என மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

அன்றாடம் உணவுக்கு தேவையான தானியங்களை, மலையடிவாரத்தில் இருந்து தலை சுமையாக சுமந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறும் மலைவாழ் மக்கள், தேர்தல் நேரங்களில் அரசு அதிகாரிகளும் வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட பொருட்களை, எங்கள் உதவியுடன்தான் ஜருகுமலைக்கு எடுத்து வருவார்கள் எனும் தெரிவித்தனர்.