Sat. Nov 23rd, 2024

400 எம்பிகளை பாரதிய ஜனதா பெற வாய்ப்பே இல்லை…

ரங்கராஜ் பாண்டேவின் சொந்த நிறுவனமான சானக்யாவின் நான்காம் ஆண்டு விழா, சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்றது,

சானக்யாவின் ஆண்டு விழாவை பாண்டே வருடந்தோறும் கொண்டாடுவதின் நோக்கமே, துக்ளக் சோ போல, தமிழ்நாட்டில் அரசியல் ராஜதந்திரியாக மாற வேண்டும் என்ற பேராசை, பாண்டேவை ஆட்டி படைப்பதுதான் முக்கிய காரணமாகும்.

இரண்டாம் ஆண்டு விழாவை சாணக்யா கொண்டாடிய போதே, பாண்டேவின் உள்நோக்கத்தை நல்லரசு இணைய தளம் வெட்ட வெளிச்சமாக்கியிருந்தது.

ஆளுநர் ஆர்.என். ரவி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அந்த விழாவில், ரங்கராஜ் பாண்டே வழக்கம் போல அவருக்கு உரிய விஷமத்தை பரப்பும் மேடையாக சாணக்யாவின் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர்கள்.

பாண்டேவின் விழாவில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், இந்து மதம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள்.

ஒட்டுமொத்த கூட்டமும், தேசபக்தி என்ற உணர்விலும் உலகிலேயே தலை சிறந்த மதமாக இந்து மதம் மட்டுமே திகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற மமதையில் இருந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவை தவிர இந்தியாவை ஆள்வதற்கு தகுதியுள்ள வேறு அரசியல் கட்சிகளே இல்லை என்ற சிந்தனைப் போக்கை கொண்டவர்கள்.

ஒரே எண்ணவோட்டத்தில் உள்ள மக்களை முட்டாள் ஆக்குவது எளிது என்பதை கடந்த பத்தாண்டு காலத்தில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் பாண்டே, நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

இந்தநேரத்தில், ஒரு தன்னிலை விளக்கத்தை பார்வையாளர்களுக்கு நல்லரசு தெளிவுப்படுத்த விரும்புகிறது. பாண்டே மீது தனிப்பட்ட வெறுப்போ, பத்தாண்டு காலத்திற்குள் அவர் எட்டியிருக்கும் உயரத்தை கண்டோ பொறாமை துளியும் நல்லரசுக்கு கிடையாது.

2000 ஆம் ஆண்டில் இருந்தே ரங்கராஜ் பாண்டேவின் குணநலன்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறது நல்லரசு என்பதை நேயர்கள் மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.

பாண்டேவின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் நல்லரசு விமர்சனம் செய்யாது. காட்டியும் கொடுக்காது.

சாணக்யா ஆண்டு விழாவில் பாண்டே அழுத்தம் திருத்தமாக பேசிய ஒன்றிரண்டு விடயங்களை மட்டுமே பார்வையாளர்களின் கவனத்தில் பதிய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சிறப்பு செய்தி தொகுப்பை வெளியிடுகிறோம். 

சாணக்யா ஆண்டு விழா துவங்குவதற்கு முன்பு நடைபெற்ற கேள்பி பதில் நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கே.அண்ணாமலையின் அண்மைக்கால பேச்சுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் ரங்கராஜ் பாண்டே.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துதான் பாரதிய ஜனதா போட்டியிட வேண்டும் என்று அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினால், தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று கே. அண்ணாமலை கூறியதை பற்றி பாண்டே  விமர்சனம் செய்தார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு உள்ள கட்டமைப்பு, கிராமங்கள் தோறும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பற்றி எல்லாம் பரிசோதனை செய்து பார்க்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி என்பது பாரதிய ஜனதாவுக்கு வெற்றியை தராது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என வியூகம் வகுத்து பிரதமர் மோடி செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட வேண்டும். அப்போதுதான் 5, 6 தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று அழுத்தம் திருத்தமாக தனது வாதத்தை முன் வைக்கிறார் ரங்கராஜ் பாண்டே.

உண்மையில் ரங்கராஜ் பாண்டே யார்.. தன்னை அவர் ஊடகவியலாளர் என்றுதான் இந்த நிமிடம் வரை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு ஊடகவியலாளருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய தகுதி என்ன.. அரசியல் சார்ப்பற்று செயல்பட வேண்டும் என்பதுதான். தனி மனித வாழ்வில் மட்டுமல்ல,  பொது வாழ்க்கையிலும் நேர்மையும், எளிமையும், தியாகம் செய்யும் குணமும் இருக்க வேண்டும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை வழிநடத்திய அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்கள், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டி, வரலாறாக மாறியிருக்கிறார்கள்.

நிகழ்கால உதாரணமாக, பொதுவுடைமை சித்தாந்தவாதி நல்லக்கண்ணு அய்யாவை எடுத்து கொள்ளலாம்.

சித்துவேலைகள், கோல்மால்கள் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியில் சிறுவயதிலேயே இணைது, தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவரைப் போல, தன்னலமற்ற ஒரு தலைவரை, நிகழ்காலத்தில் பார்க்கவே முடியாது. அவரது கொள்கை பிடிப்பையும், அவரது வாழ்வியலையும் இளம்தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும் என்று ஒருபோதும் அறிவுரை கூற மாட்டார் ரங்கராஜ் பாண்டே.

ஏன் என்றால், அதுபோன்ற வாழ்க்கையை ஒருபோதும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார் ரங்கராஜ் பாண்டே.

அவரின் முழு சிந்தனையும் முதலாளித்துவ தத்துவங்களால் நிறைந்திருப்பதுதான்.

மாத ஊதியம் கொடுப்பவரின் மனம் கோணாமல் வேலை பார்க்க வேண்டும். பணம் கொடுப்பவருக்கு முழு விசுவாசம் காட்ட வேண்டும் என்பதுதான். இந்திய அரசியல் அமைப்பையே முதலாளித்துவ சிந்தனையோடு அணுக கூடியவர்தான் பாண்டே என்பதற்கு ஏராளமான உதாரணங்களை முன் வைக்கலாம்.

நிகழ்கால உதாரணமாக அண்ணாமலையை பற்றி பாண்டே முன் வைத்து வரும் பிம்பங்களை எடுத்துக் கொள்ளலாம்.

2000 ஆம் ஆண்டில் இருந்துதான் பாரதிய ஜனதா கட்சி பற்றிய பேச்சு, தமிழ்நாட்டில் அதிகமாக கேட்க தொடங்கியது.

50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியாக இருந்தாலும் சரி, 1991 ஆம் ஆண்டில் இருந்து தமது மரணம் வரை தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவுக்குமே தலைச் சிறந்த ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட செல்வி ஜெயலலிதாவின் முழுமையான அரசியல் பயணமாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் அதிகபிரசங்கிதனத்தை காட்டிக் கொண்டதே இல்லை. கட்சி நிகழ்வில் ஆர்ப்பாட்டம் காட்டிய பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் காலங்களில் திராவிட இயக்கங்களுக்கு மாற்று பாரதிய ஜனதா என்று ஒருபோதும் முழங்கியதே இல்லை.