Sun. Nov 24th, 2024

துரோகம், சூழ்ச்சி, பொறாமை உள்ளிட்ட தீய குணங்களின் மொத்த உருவம் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆ.விஸ்வநாதன் ஆவேமாக கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் ஏகமானதாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு அவரை வாழ்த்தி அதிமுக முன்னணி நிர்வாகிகள் உரையாற்றினார்.

பி.தங்கமணி: அதிமுகவிற்கு இதுவரை தலைவராக இருந்தவர்கள்தான் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், முதல்முறையாக சாதாரண தொண்டராக அதிமுகவில் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த எடப்பாடி பழனிசாமிதான் முதல்முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே இன்றைய பொதுக்குழுக் கூட்டம் சிறப்பு வாய்ந்ததாக, வரலாற்று சிறப்பு வாய்ந்தாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய திமுக அரசை விரைவில் வீழ்த்திவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.

நத்தம் விஸ்வநாதன்: மூன்று முறை முதல் அமைச்சராக மறைந்த செல்வி ஜெயலலிதாவால் அமர வைக்கப்பட்டவர் என்று ஓ.பன்னீர்செல்வம் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறார். அதிமுகவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவருக்கும் ஓபிஎஸ்ஸின் ஒருமுகம்தான் தெரியும். நான் அவருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழகியிருப்பதால், ஓபிஎஸ்ஸின் மற்றொரு முகம் தெரியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர்தான் ஓபிஎஸ். சட்டப்பேரவையின் தேர்தலின் போது தேனி மாவட்டத்தில் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் தோல்வியடைந்த போது ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்து எனது முகத்திலேயே முழிக்காதீர் என செல்வி ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்தான் என்பதை என்னைப் போன்ற முன்னணி தலைவர்கள் நன்கு அறிவார்கள்.

ஓபிஎஸ் யாரையும் நம்ப மாட்டார். ஏன் அவரையே கூட அவர் நம்பாதவர்தான். சூழ்ச்சி, துரோகம், மோசடி உள்ளிட்ட பல்வேறு தீய குணங்களுக்கு சொந்தக்காரர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், எடப்பாடி பழனிசாமியே நம்பிக்கையின் நட்சத்திரம். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர். அவரது தலைமையில் அதிமுக மகத்தான வெற்றிப் பெறும்.

திண்டுக்கல் சீனிவாசன்:

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டவரை அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். அதிமுகவின் இரட்டை தலைமையால் குழப்பம் ஏற்படுகிறது என்று மாவட்டச் செயலாளர்கள் பெரும்பான்மையானோர் கருதியதால்தான் ஒற்றை தலைமை வேண்டும். அதுவும் அதிமுகவின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைக்கிற எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல் அமைச்சர் என்று தேர்தலை சந்தித்து கூட்டணிக் கட்சிகளுடன் 75 எம்எல்ஏக்களை வென்றோம். எடப்பாடியார்…எடப்பாடியார் என்று ஊர் உலகமெங்கும் இருக்கும் மக்கள் பேசுகிறார்கள். நீர்நிலைகள் மராமத்து பணிகளை பிரம்மாண்டமாக செய்து பொதுமக்களிடம் நல்ல பெயரை எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைமையில் இயங்குவதில் என்னை போன்ற அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் பெருமைதான். கட்சிக்கு துரோகம் இழைத்த ஓபிஎஸ்ஸை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்துவதைப் போல நானும் கோரிக்கை வைக்கிறேன்.

கே.பி.முனுசாமி:

இந்திய திருநாட்டில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் எடப்பாடியார். அவரை மக்களே தலைவராக ஏற்றுக் கொண்ட பிறகு அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் உள்ள எடப்பாடியார் தலைமையை ஏற்காமல், தனக்கு கிடைக்காததை வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் ஓபிஎஸ், நீதிமன்றத்தை நாடி தோல்வியடைந்துள்ளார்.

அதைவிட மோசமாக, எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதாவால் தீய சக்தி என்று வர்ணித்த திமுக ஆதரவோடு அதிமுக தலைமைக் கழகத்தை சட்டவிரோதமாக கைப்பற்றிய கேவலத்தை செய்திருக்கிறார் ஓ.பி.எஸ். அவரின் தீய செயலுக்கு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேமாகவும், கோபமாகவும் பேசியுள்ளீர்கள். திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிக்க முற்படும் தீய சக்தியை நிச்சயம் அழிக்கப்படும்.

ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை:

நத்தம் விஸ்வநாதன் சிறப்பு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதன் விவரம்: அதிமுகவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் வகையிலும் திமுகவினரோடு இணைந்து செயலாற்றுவது, திமுக அரசை பாராட்டுவது உள்ளிட்ட கழகத்திற்கு துரோகம் இழைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டது, அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது, தலைமைக் கழக நிர்வாகிகள் மீது புகார் கொடுத்தது போன்ற ஓபிஎஸ்ஸின் அனைத்து செயல்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். அதனை இந்த பொதுக்குழு கூட்டம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

இதேபோல கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய வைத்தியலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ் பிரபாகர் ஆகிய மூன்று பேரும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார் என்ற தீர்மானம் அதிமுக பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டது.