Thu. Nov 21st, 2024

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிறைவுரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது:

1974 ம் ஆண்டில் கிளைச் செயலாளராக அதிமுகவில் அரசியல் பயணத்தை துவங்கிய நான், ஒன்றியச் செயலாளராக, மாவட்டச் செயலாளராக, எம்எல்ஏவாக, எம்பியாக பணியாற்றியுள்ளேன்.

1989 ஆம் ஆண்டில் செல்வி ஜெயலலிதா தலைமையில் சேவல் சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றேன்.அடுத்து 1991 ஆம் ஆண்டிலும் எம்எல்ஏ ஆனதுடன் 2011 ஆம் ஆண்டில் மீண்டும் எம்எல்ஏ ஆனபோது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.

அதிமுக கட்சி மிகுந்த ஜனநாயக ரீதியிலான அமைப்பு. கட்சிக்கு விசுவாசமாக இருந்தாலும் பதவி மேல் பதவி கிடைக்கும்.ஆனால், துரோகம் இழைப்பவர்கள்தான் கட்சிக்கு வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி செல்வி ஜெயலலிதாவிடம் நல்ல பெயரை பெற்றேன். அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு முதல் அமைச்சராக பதவியேற்று நான்காண்டுகள் தமிழகததிற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினோம்.

இன்றைக்கு திமுக அரசு திறந்து வைத்திருக்கும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அதிமுக அரசில் அடிக்கல் நாட்டப்பட்டதுதான். நான் முதல் அமைச்சராக பதவியேற்றபோது 3 மாதத்தில் ஆட்சி கலைந்துவிடும், 6 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும் என்று அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிக் கொண்டிருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னணி தலைவர்கள் அனைவரும் மக்களை சந்தித்து பெருவாரியான வெற்றியைப் பெற்று இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.

திமுக ஆட்சியில் இன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. கஞ்சா இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்குதான் இருக்கிறது. ஆன் லைன் ரம்மியால் தமிழக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் அரசின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், நிர்வாகத் திறமையற்ற தலைமையால் குழப்பத்தில் உள்ளனர். கமிஷன், கலெக்ஷன்,கரெப்ஷன் ஆகியவற்றில் தான் திமுக அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

திமுக அரசை வீழ்த்திவிட்டு அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற உங்களின் விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.

ஒற்றை தலைமை பதவியை கொண்டு வர வேண்டும் என்று ஓபிஎஸ்ஸிடம் பலமுறை பேசினோம். ஆனால், அவர் விட்டு கொடுக்கவே இல்லை. அதிமுகவுக்கு ஓபிஎஸ் இருந்த போதும் இல்லை.

செல்வி ஜெயலலிதா போடியில் போட்டியிட்ட போது எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிறை ஆடை நிர்மலாவுக்கு தலைமை முகவராக பணியாற்றியவர்தான் ஓபிஎஸ்.

அதிமுகவின் தலைவராக உள்ள ஓபிஎஸ், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருப்பவரே எதிர்க்கட்சியினரோடு தொடர்பு வைத்திருப்பதுதான் அதிமுகவுக்கு காட்டும் விசுவாசமா?

நான் முதல் அமைச்சராக பதவி வகித்த போது, அந்த பதவிக்குரிய அதிகாரத்தோடு செயல் ஆற்றாமல் உங்களில் ஒருவனாக பணியாற்றினேன். அதே எண்ணத்தோடுதான் பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தாலும் உங்களில் ஓருவனாகதான் பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.