அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள வானகரம் நோக்கி காலை நேரத்திலேயே புறப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருப்படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இபிஎஸ்ஸை வழியனுப்பி வைக்கும் விதமாக அவரது இல்லத்தில் குவிந்துள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள் அவரை வாழ்த்தி உற்சாக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து புரசைவாக்கம் மற்றும் மயிலாடுத்துறையில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள் இபிஎஸ்ஸுக்கு மலர் மாலைகளை வழங்கி ஆசிர்வாதம் செய்தனர்.
தொடர்ந்து அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஆளுயர மாலைகள் அணிவித்தும் வெற்றி வேல் வழங்கியும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், பிரத்யேக வாகனத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் *ஸ்ரீவாரு திருமண மண்டபத்தை நோக்கி எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.
பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வழங்குவதாக தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார். இருப்பினும் காலை 6 மணி முதலே அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள மண்டபத்திற்கு ஆர்வத்துடன் வந்துக் கொண்டிருக்கின்றனர். அனைவரின் உறுப்பினர் அட்டைகளையும் தீவிர ஆய்வு செய்த பின்னரே அங்கிருக்கும் பாதுகாப்பாளர்கள், மண்டப அரங்கிற்குள் பொதுக்குழு உறுப்பினர்களை அனுப்பி வைக்கின்றனர்.
பெண் பொதுக்குழு உறுப்பினர்களும் திருமண விழாவிற்கு செல்வதைப் போல பட்டுச்சேலை அணிந்து வந்துள்ளனர். பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவாரு திருமண மண்டபம் அமைந்துள்ள பகுதி முழுவதும் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகிய தலைவர்களின் பதாகைகளும் அதிமுக கொடிகளும், வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஓ. பன்னீர்செல்வம் புகைப்படம் ஒரு இடத்தில் கூட வைக்கப்படவில்லை..
அதிகாலையிலேயே அதிமுக பொதுக்குழுக் கூட்டம் களை கட்டியுள்ளதால் அங்கு திரண்டுள்ள அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை தொடர்ந்து எழுப்பி வருவதால், அந்த இடமே களை கட்டியுள்ளது.