கடந்த 15 நாள்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெட்ரோல், டீசல் விலையை விரைவாக குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கூடவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பிப்ரவரி 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை மேற்கு, தென்மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி எம்.பி. தயாநிதி மாறன், மு.க.தமிழரசு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், மாவட்டந்தோறும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.