பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக காவல்துறை நியமனங்களில் முன்னாள் துணை ராணுவப்படையினருக்கு அளிக்கப்பட்டு வந்த 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், இனி முன்னாள் இராணுவத்தினருக்கு மட்டும் தான் அத்தகைய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இந்த முடிவு தவறு. இராணுவமும், துணை இராணுவமும் ஒன்றல்ல என்றும் வாரியம் கூறியுள்ளது. இரண்டும் ஒன்றல்ல என்றாலும், அவற்றின் பணி நாட்டைக் காப்பது தான். அதனால் தான் அப்படைகளின் முன்னாள் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது!
இராணுவத்திற்கு இணையாக கடினமான, ஆபத்தான எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்பு படை, இந்திய -திபெத் எல்லைப் படை உள்ளிட்டவற்றின் வீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொந்த மாநில காவல்துறையில் பணியாற்ற விரும்புவர். அதற்கு இந்த இட ஒதுக்கீடு அவசியம்!
இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இதை மறுப்பது நியாயமற்றது. காவல்துறை நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அதற்கேற்ற வகையில் திருத்தப்பட்ட காவலர் தேர்வு அறிவிக்கையை வெளியிட வேண்டும்!
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.