தமிழக பா.ஜ,க இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அவரது ஹிந்திப் பேச்சை தமிழக பாஜக முன்னாள் நிர்வாகி ராஜா மொழிப்பெயர்த்தார்.
கொரோனோ காலத்தில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோ தடுப்பு ஊசி மருந்து உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி நமது நட்பு நாடுகளுக்கும் வழங்கும் அளவிற்கு உற்பத்தி துறையில் சாதனைப் படைத்து இருக்கிறது.
கொரோனோ காலத்தில் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை மட்டும் அல்ல, பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துவிட்டது. அதனால், இந்திய மக்கள் ஒருவர் கூட பட்டினியோடு வாழக் கூடாது என்று பிரதமர் மோடி, பல கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்களை வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.
இந்தியாவின் பொருளாதாரம் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இந்திய ராணுவத்தின் உற்பத்தி தளம், சேலத்தில் அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். அதன் மூலம் சேலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் முதற்கட்டமாக கிடைத்துள்ளன.
சேலம் விரைவுச் சாலை பணி 2022 ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு வரும். ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தனது ஆட்சிக் காலத்தில், டெல்லியில் இருந்து மாநிலங்களில் உள்ள மக்களுக்கு 100 பைசா அனுப்பினால், 13 பைசாதான் கிடைக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைக்கு பிரதமர் மோடி காலத்தில் டெல்லியில் இருந்து 100 பைசா அனுப்பினால், அது முழுமையாக மாநிலங்களுக்குச் செல்கிறது. இது எப்படி சாத்தியம் என்றால், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களும் மின்னணு முறையில் செயல்படுத்தப்பட்டதால்தான்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு உதவி செய்துள்ளது. தமிழகத்திற்கு கிடைத்து வந்த மத்திய அரசின் நிதியுதவியை 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.