மதுரை எம்பி சு.வெங்கடேசன், ஒன்றிய அரசின் நிலக்கரித்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன் அறிவிப்பின்றி கேட் (GATE) மதிப்பெண்களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித்தும் அதனால் இந்த தேர்வு முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கோரி ஏற்கெனவே என்.எல்.சி தலைவர் இராகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
இதனையொத்த நிறுவனங்களில் தேர்வுத் தகுதி குறித்து முன் அறிவிப்பு தந்து தேர்வர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. 2018 இல் இதே என்.எல்.சி யில் கூட GATE மதிப்பெண் தகுதி ஆக்கப்பட்ட போது அறிவிக்கை உரிய அவகாசத்தொடு செப்டம்பர் 2017 லிலேயே வெளியிடப்பட்டது. இம்முறை இங்கேயும் உரிய முன் அறிவிப்பு தந்திருந்தால் விருப்பமுள்ள தேர்வர்கள் கேட் (GATE) தேர்வை எழுதி இருப்பார்கள். இப்படி முன் அறிவிப்பின்றி தேர்வு தகுதியை மாற்றியது அநீதி, சம வாய்ப்பை மறுப்பது எனச் சுட்டிக் காட்டி இருந்தேன்.
மேலும் இப்பதவிக்கான நியமனங்களில் தமிழ் நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இறுதி தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவது அரிதாகி வருகிறது எனக் கவலையையும் தெரிவித்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி இருந்தேன்.
தற்போது 300 பேர் கொண்ட நியமன பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அப் பட்டியலில் உள்ள பெயர்களைப் பார்க்கும் போது தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒரே ஒருவர்தான் இடம் பெற்றிருக்கிறார்.
ஆகவே இந்த தேர்வு முறையை நிறுத்தி விட்டு உரிய அவகாசத்துடன் தேர்வுத் தகுதிகளை அறிவித்து புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகத்தை அறிவுறுத்துமாறு ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் மூலம் சு.வெங்கடெசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.