Sun. Apr 28th, 2024

ஆன்மீகத்துக்கு எதிரான அரசியல் கட்சியாக தி.மு.க.வை சித்தரிக்க திட்டமிட்டு முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது, ‘அவர் சன்னிதானத்துக்கும், சடங்குகளுக்கும் பிரச்சினை இல்லாமல் முதல்-அமைச்சர் நடுநிலையோடு தீர்வு காண்பார்’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

“தி.மு.க. ஆன்மீகத்துக்கு எதிராக இருப்பது போல சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழி நடத்திய ஆட்சி, மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இது திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.