கட்டுரையாளர்: தென்னவன், மூத்த ஊடகவியலாளர்…
இந்திய மற்றும் தமிழக அரசியல் வரலாற்றில் தன்னை ஒரு போர்க்குணமிக்க மனிதனாக, நிலைநிறுத்திக் கொள்ள இயற்கையே ஒரு வாய்ப்பை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வதே பகுத்தறிவு.
பழம் நழுவி பாலில் விழுந்தது என்பார்களே அப்படி ஒரு வாய்ப்பு இது. பாலில் விழுந்ததோடு அந்தப் பழம் தானாக பறந்து சென்று அவரது வாயை கவ்விக் கொண்டது என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பாக உள்ளது தமிழக அரசியல் சூழல்.
பயங்கரவாத காவிக்கும்பல் ஒருபுறம் மதத்தின் பெயரால் தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. திமுக அமைச்சர்கள் லஞ்சமுறைகேடு வழக்கில் மாட்டிக் கொள்ள பாஜகவினர் அனைத்து இடங்களிலும் பொறிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆளுங்கட்சியிலும், அதிகார மட்டத்திலும் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்கள்மூலம் தகவலைப் பெற்று திமுக ஆட்சியை, திராவிட இயக்கத்தின் ஆட்சியை ஒழித்துவிடத் துடிக்கின்றனர்.
பாஜகவின் கிளைக் கழகங்களாக செயல்பட்டு வரும் நாம் தமிழர், மணியரசன் போன்ற அடிவருடிகள் காவி பங்கரவாதிகளுக்கு துணைபோவது தமிழர்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்றனர். மற்றொருபுறம் ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அதிமுக என்ற கயமைக் கும்பலும் அவர்களது அடிவருடிகளும். கண்கொத்திப் பாம்புகளாக நடமாடி வருகின்றனர்.
இப்படிப்பட்ட விஷ சூழலுக்கு மத்தியில்தான் திமுக தனது ஆட்சியை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தூய்மையான ஆட்சியை அப்பழுக்கற்ற ஓர் ஆட்சியை நடத்த திமுகவுக்குக் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு இது.
தமிழகத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே என்ற சட்ட முன்வடிவு பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப இதே ஆளுநர்தான் கையொப்பமிடவேண்டும் என்ற அவல நிலையை போக்க வேண்டும்.
நீட் மசோதாவுடன் இதையும் சேர்த்து ஆளுநர் அதன்மீது உட்கார்ந்துகொண்டால் என்ன செய்வது?
ஆக, ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கு அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக ஆளுநர் உதகையில் நடத்திவரும் துணைவேந்தர் மாநாடு ஓர் எதேச்சதிகாரப்போக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் என்ற தனிநபர், தமிழகத்தின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதும், அதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், அதிமுக ஒத்து ஊதுவதும் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
நீருபூத்த நெருப்பைப் போல் மக்களின் கோபம் இருப்பது அவர்களுக்குப் புரியவில்லை. தமிழக அரசு இதில் மெத்தனப் போக்காக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இப்படிப்பட்ட சூழலை பயன்படுத்தி தனது ஆளுமைத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
பாசிச சக்திகளுக்கு எதிராக அவர் வீரியத்துடன் களமாட வேண்டும். இனியும் தாமதித்தால் மக்களிடம் இருந்து கெட்டப்பெயரை திமுக வாங்கும் நிலை ஏற்பட 100 விழுக்காடு சாத்தியப்பாடு உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டில் இறங்கினால் மக்களின் பெரும்பான்மை ஆதரவு அவருக்குக் கிடைக்கும். ஆதிக்க பார்ப்பன-பனியா சக்திகள் தமிழகத்தைவிட்டு கூண்டோடு தலைதெறிக்க ஓடவேண்டும்.