சட்டப்பேரவையில் இன்று பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் நாசர், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முக்கிய அம்சங்கள்:
2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நுகர்வோரின் தேவையை கருதி 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.
வளசரவாக்கத்தில் தனியார் பங்களிப்புடன் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும்.
ஒரு கறவை மாட்டிலிருந்து பெறப்படும் பாலின் அளவை நாள் ஒன்றுக்கு தற்போது உள்ள 6.80 லிட்டரிலிருந்து 7.02 லிட்டர் ஆக உயர்த்துவது தான் பால்வளத்துறையின் எதிர்காலத் திட்டமாக உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி 18 நாட்களில் சிறப்பு இனிப்பு வகைகள் 87 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறைகள் அனைத்தும் ஆவினில்தான் இனிப்புகள் வாங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, முந்தைய ஆட்சிக்காலத்தை விட கடந்த ஆண்டு அதிகளவு விற்பனையாகியுள்ளது. அதன் காரணமாக இனிப்புகள் இருப்பு இல்லாமல் போனது. ஆனால், முந்தைய ஆட்சியில் 7 டன் அளவுக்கு இனிப்புகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், பணி வழங்குவது போன்ற பல தரப்பட்ட கோரிக்கைகளை பரீசிலனை செய்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படும்.
தமிழ்வழிக் கல்வியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.