மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான இன்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் இந்த மாநாட்டில் அக்கட்சியின் 85 உறுப்பினர்களை உள்ளடக்கிய மத்தியக்குழுவிற்கான உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அந்தக் குழுவில் தமிழகத்தில் இருந்து தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணன் கே.பாலகிருஷ்ணன் உ.வாசுகி பி.சம்பத் பி.சண்முகம் ஆர்.கருமலையான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதேபோல, 17 தலைவர்களைக் கொண்ட பொலிட் பீரோவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கண்ணூரில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராட தெதன் மாநில முதல் அமைச்சர்கள் குழு அமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவாக இன்று இரவு கண்ணூரில் உள்ள ஏகேஜி நகரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னணி தலைவர்கள் பிரகாஷ் காரத், மாணிக சர்கார், கேரள முதல்வர் பினராய் விஜயன், பிருந்தா காரத் உள்ளிட்ட பலர் உரையாற்றவுள்ளனர். இந்த பொதுச் கூட்டத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி நடைபெற்றது. செஞ்சட்டை அணிந்த மகளிர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி, கன்னூரின் முக்கிய சாலைகள் வழியாகச் வீறுநடை போட்டுச் சென்றது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.