Sun. Nov 24th, 2024

முந்தைய அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கென தனியாக 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின் தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராஜ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தவுடன் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என்ற தகவல் நேற்று வெளியானது. அதற்கு ஏற்ப, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அப்போது, சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது.வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு முழு மூச்சுடன் முயற்சி மேற்கொண்டும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக, அவசர கோலத்தில் அதிமுக சட்டம் இயற்றியதால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

சரியான அடிப்படை தரவுகள் இல்லாததாலேயே வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் அருந்ததியினர், இஸ்லாமியர்களுக்கான ஒதுக்கீடு சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டன.

சரியான ஆதாரங்கள் அடிப்படையில் திமுக கொண்டு வந்த ஒதுக்கீடுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.