Mon. May 6th, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். முதல்வருடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நண்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமருடான சந்திப்பில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் முதல்வர் சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் – அண்ணா அறிவாலயத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், அகில இந்திய அரசியல் கட்சித்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

தெற்கின் வரலாறு டெல்லியில் எழுதப்படுகிறது…

ஏப்ரல் 2 நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.