கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களிடையே, உயர்ந்த சாதி பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தாழ்த்தப்பட்டோரை கொடூரமாக கொலை செய்யும் ஆணவக் கொலை நிகழ்வுகள், தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கிறது.
அத்தகைய வழக்கில், கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு நிகழ்வு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டமின்றி தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வழக்கு கடந்து வந்த பாதை
கடந்த 2015 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோல்குராஜ், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். அதே ஆண்டில் ஜுன் மாதம் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வர் கோயிலில் சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்தார். அன்றிரவு அவர் வீடு திரும்பாத நிலையில்,அவரது பெற்றோர், காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
காவல் துறையினர் விசாரணையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜின் அடியாட்கள் கோகுல்ராஜை கடத்தி சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளது தெரியவந்தது.
மறுநாள், ஜுன் 24 ஆம் தேதி ஈரோடு அருகே உள்ள பள்ளிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், கோகுல்ராஜை கொடூரமாக கொலை செய்த யுவராஜ் உள்ளிட்ட கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதன் பிறகு கோல்குராஜ் உடலை பெற்றுக் கொள்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் உள்பட 11 பேர் தலைமறைவாகினர். யுவராஜ் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த வழக்கை பிரத்யேகமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா, வழக்கு விசாரணை சூடுபிடித்த நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பு
இதன் பிறகு, கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தநேரத்தில், தலைமறைவாக இருந்த யுவராஜ் வெளியிட்ட வீடியோ ஒன்று காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி கோகுல்ராஜ் தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விஷ்ணுபிரியா தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என்றும் காவல் துறையினரின் அதீத தொல்லைகளால் மனவேதனைப்பட்டே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என யுவராஜ், வீடியோ மூலம் தெரிவித்த கருத்தும் தலைமறைவாக இருந்து கொண்டிருந்தபோது தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசியதும், சிபிசிஐடி காவல்துறையினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
மூன்று மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து காவல்துறை அதிகாரிகளை திண்டாட வைத்த யுவராஜ், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நாமக்கல் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு ஆஜராகினார்.
அரசு வழக்கறிஞர் மாற்றம்
நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், அந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. யுவராஜ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோகுல்ராஜின் தாய் சித்ரா 2019 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றப்பட்டு சுவாதி உள்பட 116 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே அரசு வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என சித்ரா தொடர்ந்து வழக்கையும் ஏற்று, புதிய அரசு வழக்கறிஞராக மோகன் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த 2019 ஆண்டு முதல் கோகல்ராஜ் கொலை வழக்கு மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதல் சாட்சியான சுவாதி பிறழ்சாட்சி அளித்த போதும் கூட, திருச்செங்கோடு அர்த்தநாரி கோயில் வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை முக்கிய ஆதாரமாக வைத்து, அரசு வழக்கறிஞர் மோகன், கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள் என அழுத்தம் திருத்தமாக வாதங்களை முன்வைத்து வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து வந்த காலத்தில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தவுடன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
தண்டனை விவரம் அறிவிப்பு
இதனையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றத் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, மதுரை சிறப்பு நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சாதி அமைப்பு நிறுவனரான யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் ( ஒருவர் தலைமறைவாகவே இருக்கிறார்) என அறிவித்தது. 5 பேர் விடுவிக்கப்பட்டனர். எஞ்சியவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (மார்ச் 8) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அதன்படி, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கொலையாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். காலையில், இருதரப்பு வழக்கறிஞர்களின் நிறைவு வாதங்கள் நீதிபதி சம்பத்குமார் முன் வைக்கப்பட்டன. மாலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் நீதிமன்றம் மீண்டும் கூடியதும், தண்டனை விவரத்தை நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார்.
அதன் விவரம் இதோ…
கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜ்க்கு ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்படுகிறது.
சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருண், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்கால் ரூ.5,000 அபராதம் விதித்தும் மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.