வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக தேனி மாவட்ட அதிமுகவில் இருந்துதான் முதல்குரல் எழுந்தது. மாவட்ட நிர்வாகிகள் பலர் ஒன்று கூடி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகிகள் சிலர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு காரணம், அதிமுகவில் வலிமை வாய்ந்த தலைவர் இல்லை. டிடிவி தினகரனின் அமமுக தனித்துப் போட்டி போன்ற காரணங்களால்தான் அதிமுகவுக்கு வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது என்றும் பொங்கினார்கள்.
ஆனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், பல்வேறு நகரங்களில் அதிமுக நிர்வாகிகள், ஆளும்கட்சியான திமுகவிடம் விலை போனதன் காரணமாகவும், சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைத்ததன் காரணமாகவே வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட அதிமுக தோல்வியை தழுவியது என அம்மாவட்ட நிர்வாகிகள், அதிமுக தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
அந்த கடிதங்களை ஆற அமர பரிசீலித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிர்வாகிகள், தற்போது, வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் பகிரங்கமாகவே ஆதரவு குரல் கொடுத்து வருவதால், தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு துரோகம் இழைத்த முக்கிய நிர்வாகிகளை கூண்டோடு களையெடுக்கும் அதிரடியை துவங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன் காரணமாகவே, தேனி மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிமுக தலைமைக்கழகத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியிடப்படும் அறிக்கையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய உண்மை. அதுவும், ஓ.பன்னீர்செல்வமே தனது மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் உத்தரவில், அவரே கையெழுத்திட்டுள்ளார் என்பதுதான் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கதிகலங்க வைத்துள்ளது.