அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தொடரப்பட்ட 3 வது வழக்கில், மார்ச் 11 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக நிர்வாகி நரேஷ் உள்ளிட்டோர் கள்ள வாக்குவதாக செலுத்துவதாக எழுந்த விவகாரத்தில், அவரை தாக்கி, அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வந்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2 வது வழக்காக, கொரோனா விதிகளை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, ஜெயக்குமாரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதும், முதல் வழக்கான திமுக நிர்வாகி தாக்குதல் வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தொழில் அதிபர், சகோதர்களுக்கு இடையோன 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தூண்டுதலின் பேரில் அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது மருமகன் நரேஷ் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் ஜெயக்குமாருக்கு எதிராக 3 வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூன்றாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை பலத்த பாதுகாப்புடன் சென்னை கிண்டி அருகே உள்ள ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் பின்னணி குறித்து கேள்வி எழுப்பி ஜெயக்குமாரே, தனக்காக வாதாடினார். அப்போது அவர் திருக்குறனை மேற்கோள் காட்டியும் தன் தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதிட்டார்.
திருக்குறளை தான் விரும்பி படிப்பேன் என கூறி, ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார். அதன்படி, குற்றத்தை ஆராய்ந்து எந்த பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாமல், வழங்கப்படுவதே நீதி என நீதிமன்றத்தில் ஜெயக்குமார் விளக்கினார். ஆனால், ஜாமின் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்ற நீதிபதி, ஜெயக்குமாரை வரும் 11ம் தேதி வரையில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
இருதரப்பு விசாரணையின் முடிவில், வரும் 11 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மீண்டும் ஜெயக்குமாரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் அடைத்தனர்.
ஜெயக்குமார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதையடுத்து, அவரது மகன் ஜெயர்வர்தன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலந்தூர் சாலையில் கூடியதால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.