அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டதால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இதனை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது.
அதேவேளை, தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவுக்கு தனிப்பட்ட முறையில் குடும்ப ரீதியில் பிரச்சினை இருக்கலாம். அவரது சித்தி சரண்யாயின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம். அது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
இதனிடையே, தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. மாணவி லாவண்யாவின் பெற்றோர் தரப்பு, தமிழ்நாடு அரசு தரப்பு, தூய இருதய மேல்நிலை பள்ளி தரப்பு உள்பட பல்வேறு தரப்பு வாதங்களும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு)-க்கு மாற்றி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
வரவேற்பு
அகில இந்திய பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ள கருத்து இதோ…