Sat. Nov 23rd, 2024

சிறப்புக் கட்டுரை :

பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

:பாபிலோனிய நகரம் சர்கான் காலத்தில் ஒரு சிறு நகரமாக இருந்தது. கி.மு. 1894இல் அரசன் சுமுஅபும்(SUMU-ABUM) தான் முதல் பாபிலோனிய அரசைத் தொடங்கினான். இதன் புகழ்பேற்ற அரசன் கமுராபி (Hammurabi:கி.மு.1792-1750), அரசனான போது பாபிலோனியா ஒரு சிறு அரசாக இருந்தது. கமுராபி சிறு அரசுகள் பலவற்றை வென்றதோடு, கிழக்குச் சிரியா, தென்கிழக்குத் துருக்கி, ஈராக் என பல பகுதிகளை வென்று பாபிலோனிய அரசை ஒரு பேரரசாக ஆக்கினான். அப்பொழுது உலகின் மிகப்பெரிய நகரமாக பாபிலோனியா உருவானது. அவன் ‘கமுராபி சட்டம்’ என்ற சட்டத்தொகுப்பு ஒன்றை உருவாக்கினான். குடிமக்கள், பொதுமக்கள், அடிமைகள் ஆகிய மூன்று வகுப்புகள் பாபிலோனியாவில் இருந்தனர்.

அடிமைகளுக்கு சொத்து வைத்துக் கொள்ளவும், வணிகம் செய்யவும், கடன் வாங்கவும், தங்கள் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவும் உரிமை இருந்தது. பெண்கள் சொத்து வைத்துக் கொள்ளவும், பிற சட்டபூர்வ உரிமைகளையும் கொண்டிருந்தனர். அவனுடைய இறப்புக்குப்பின் அதன் நாகரிகம் நீடிக்கவில்லை. பாபிலோனிய மொழி அரசு மொழியாக இருந்தது. கி.மு. 1595இல் கிட்டைட்டி (Hittite) மக்கள் அந்நகரத்தைக் கைப்பற்றினர். அதன்பின் அந்நகரம் பலரின் கைக்கு மாறியது.புதிய பாபிலோனிய பேரரசு கி.மு. 626இல் தொடங்கப்பட்டது. அதன் புகழ்பெற்ற அரசன் நேபுகாத்நேசர்(Nebuchadnezzar II: கி.மு.604-562).

இவர் இன்றைய மத்திய கிழக்கின் பெரும்பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். பாபிலோனியா நகரத்தை மீண்டும் சீரமைத்து பெரு நகராக ஆக்கினார். இங்கு இவர் தொங்கும் தோட்டம், பேபில் கோபுரம் ஆகியவற்றையும் பல சிறந்த கட்டிடங்களையும் அமைத்தார். இந்நகரிலும் அதனைச்சுற்றியும் அக்காலத்தில் 2,50,000 மக்கள் வாழ்ந்தனர். இதுதான் அன்று மத்திய கிழக்கின் மிகப்பெரிய வணிக நகராக இருந்தது. கமுராபி முதல் நேபுகாத்நேசர் வரையான காலகட்டத்தை பாபிலோனிய நாகரிகமாகக் கொள்ளலாம். அதன்பின் பாரசீகப் பேரரசன் டைரியசு கி.மு. 539 இல் நடத்திய படையெடுப்பில் இந்நகரம் பர்சியன் நகராக ஆகிப் புகழோடு விளங்கியது. கி.மு. 334-330இல் நடந்த அலெக்சாண்டர் படையெடுப்புக்குப்பின் அந்நகரம் கிரேக்க ஆளுகையின் கீழ் வந்தது. அதன்பின் கி.மு. 141இல் இந்நகரம் பார்த்தியன் பேரரசில்(Parthian Empire) இணைக்கப்பட்டு அழிவுக்குள்ளானது.

அக்காடியன் மொழியின் கிளை மொழிகள்தான் பாபிலோனிய, அசிரியன் மொழிகள். கி.மு. 800க்குள் அக்காடியன் மொழி வழக்கிழந்து போய் பாபிலோனிய, அசிரியன் மொழிகள் மக்கள் மொழிகளாயினசான்று: 1.The World Book Encyclopedia, USA, 1988, vol-2, page: 11-14 அசிரியன் நாகரிகம்:இதன் காலம் கி.மு. 1200-612. மெசபடோமியா பகுதியில் ஊர் என்ற நகர அரசின் அருகில் இருந்த அசுர்(Assur) என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கி.மு. 1813இல் அசிரிய என்ற அரசு உருவானது.. அசிரிய(Assyria) அரசு பின் பாபிலோனியாவின் கீழ் வந்தது. அதன்பின் கி.மு. 1300இன் இடையில் அது சுதந்திரம் அடைந்து கி.மு. 1200-1100 வரை ஓரளவு விரிவடைந்து வந்தது. சல்மன்சர்-III(Shalmanser-III) கி.மு. 858-824 வரை ஆண்டான். அவன் காலத்தில் அது பெரிய அரசாக வளர்ந்தது. அவன் கி.மு. 842இல் மத்தியதரைக் கடலுக்கான வணிகப் பாதைகளை கைப்பற்றினான். பின் பொனீசிய நகரங்களையும் கைப்பற்றினான்.

அசிரிய அரசு கி.மு. 800இல் ஒரு பேரரசாக ஆகியது.டிக்லாத் பைல்சர்-III(TiglathI-Pileser-III) என்பவன் கி.மு. 744-727வரை ஆண்ட போது சிரியாவின் பெரும்பகுதியும், இசுரேலும் அவனுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டு அவன் பாபிலோனின் அரசன் ஆனான். கி.மு 680-669 வரை ஆண்ட எசர்காடன்(Esarhaddon) எகிப்தையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். அதன்பின் கி.மு. 614-612 வரை நடந்த போரில் அது பாபிலோனியர்களிடம் வீழ்ச்சி அடைந்தது. அசிரியன் மொழி என்பது ஒரு செமிடிக்(Semitic) மொழி. அக்காடியன் மொழி வழக்கிழந்தபின், கி.மு. 800 முதல் அதன் கிளை மொழியான அசிரியன் மொழி மக்கள் மொழியானது. இக்காலத்தில் அராமைக் மொழியும் அரசின் மொழியாகவும் மக்கள் மொழியாகவும் இருந்தது. சான்று: 1. The World Book Encyclopedia, USA, 1988, vol-1, page: 820-823