Mon. Nov 25th, 2024

                கதிகலங்கிப் போயிருக்கும் எஸ்.பி.வேலுமணி ஆதரவுக் கூட்டம்…

ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாததால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்துக் கொள்ள இரண்டாம் கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள திமுக தலைமை முனைப்பு காட்டுகிறதோ என்ற சந்தேகத்தை கோவையில் முகாமிட்டு உடன்பிறப்புகளை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிரடி தேர்தல் களப் பணிகள் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் கோவை திமுக முன்னணி நிர்வாகிகள்.. 

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக முதல்முறையாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை திமுக  மீண்டும் பெற அதிரடி வியூகங்களை வகுத்தார். அதன்படி, கோவை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோரை நியமித்து, சோகத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, கட்சிப் பணிகளை வேகப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், இரண்டு அமைச்சர்களால், அந்த மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபம் காட்டி கொண்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அரசியல் சதுரங்க ஆட்டம் முன்பு செல்லுபடியாகவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனைக்குப் பிறகும் கூட, அடக்கமாக அரசியல் செய்யாமல், திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையிலேயே அன்றாடம் அரசியல் பணிகளில் ஆவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார், எஸ்.பி.வேலுமணி. அடிபட்ட சிங்கம் போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாய்ச்சலை எஸ்.பி.வேலுமணி காட்டிக் கொண்டிருப்பதால், கோவை மாவட்டத்தில் இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டி,  இன்றைய தேதியிலேயே அனலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் அதிரடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர் பதவி உள்பட நகராட்சி, பேரூராட்சி ஆகிய மன்றங்களை முழுமையாக கைப்பற்றி கோவை மாவட்டம் முழுவதும்  திமுக கொடி வெற்றிக்கொடியாக பறக்க, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை களத்தில் இறக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கோவை மாவட்ட பொறுப்பாளர் என்ற பந்தாவோடு கோவை நகரத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தனது அதிரடி அரசியலை துவக்கி எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறார். பத்தாண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாததால் சோர்ந்து போய் இருக்கும் கோவை மாநகர திமுக நிர்வாகிகள், மாவட்ட உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உற்சாகப்படுத்தி, களப்பணியில் தீவிரமாக பணியாற்றும் வகையில் முடுக்கிவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட திமுக பிரமுகர்களுக்கு ஒத்த பைசா செலவு வைக்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவைக்கு வரவழைத்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்ததையடுத்து, சோம்பலில் இருந்த கோவை மாவட்ட திமுக, புதுரத்தம் பாய்ச்சப்பட்ட பந்தயக் குதிரை போல, நான்கு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வைத்ததுதான் சட்டம் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே உணர்த்திவிட்டதால், எஸ்.பி.வேலுமணியின் அதிரடி அரசியலை தூக்கி வீசும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அவரின் அதிரடி அரசியல் ஆட்டத்தை கூடவே இருந்து பார்த்து வரும் திமுக முக்கிய புள்ளி ஒருவர், வியப்பு நீங்காத மனநிலையிலேயே பேசினார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகள், மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி ஆகிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் திமுக சார்பில் வேட்பாளர்களை தயார் செய்யும் முழுப் பொறுப்பையும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமே ஒப்படைத்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அமைச்சர் செந்தில் பாலாஜி தயாரித்துவிட்டார். மாநகராட்சி வார்டு கவுன்சிலர் முதல் பேரூராட்சி, நகராட்சி வரை அனைத்து கவுன்சிலர் பதவிகளுக்கும் முறையே தலா மூன்று பேர் என்ற விகிதத்தில் பட்டியல் தயாரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிடம் ஒப்படைக்க, அவற்றுக்கு கண்ணை மூடிக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழஙகிவிட்டார்.

வாரந்தோறும் வெள்ளி, சனிக்கிழமை கோவையில் முகாமிடும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாநகரம், நகரம், பேரூர் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, ஒவ்வொரு வார்டுக்கும் 20 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை விரட்டி விரட்டி வேலை வாங்கியுள்ளார்.

அவரின் அதிரடி கள அரசியலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போதும், தேர்தல் உற்சாகத்தின் காரணமாக, மாவட்டம் முழுவதும் 25000 பூத் கமிட்டி உறுப்பினர்கள், முன்களப் பணியாளர்களைப் போல சிலுப்பிக் கொண்டு நிற்கிறார்கள்.

கடந்த 27 ஆம் தேதி 25000 பேரையும் ஒரே இடத்தில் திரட்டி, அதிமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. எந்த விழாவாக இருந்தாலும் பிரம்மாண்டம்தான் செந்தில் பாலாஜியின் பாணி அரசியலாக அமைந்திருக்கிறது. பூத் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தைப் பார்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினே வியந்து போய்விட்டார்.

மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தேர்தல் கள வித்தைகளை எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதற்காக அவர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாம் கோவை மாவட்ட அரசியலுக்கே புதுமையானது. பிப்ரவரி மாதம்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றாலும்கூட, அதற்கு முன்பாகவே எப்போது தேர்தல் வந்தாலும், எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் தயாராகவே இருக்கிறார் அமைச்சர் செந்தில்  பாலாஜி.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவியை பிடிப்பது என்பது, தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையேயான மானப் பிரச்னையாகிவிட்டது.  ஆளும்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையேயான போட்டியாக இல்லாமல், இரண்டு முக்கிய தலைகளுக்கு இடையேயான மோதலாக உருவாகி இருப்பதால் இன்றைய நிலையிலேயே கோவை மாநகரத்தில் தேர்தல் ஜுரம் கொதிநிலையை தொட்டுவிட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாலும், வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடா, தேர்தல் செலவுகள் உள்ளிட்டவற்றை கவனிக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே, கரூரில் இருந்து விசுவாசமிக்க படை வீரர்களாக 100 பேரை கோவைக்கு அழைத்து வந்துவிட்டார் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. 100 பேரும் அவரவருகக்கு ஒதுக்கப்பட்ட வார்டுக்குச் சென்று, அந்த வார்டில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஜாதகத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த வார்டில் உள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிக்க துவங்கிவிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே வார்டு தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை உடனடியாக அறிவித்துவிடும் வகையில், மூன்று பேர் கொண்ட பட்டியலில், ஒருவரை நீக்கிவிட்டு, இரண்டு பேரில் ஒருவர் வேட்பாளர் என்பதை அறிவிக்கும் அளவுக்கு தேர்தல் பணிகளில் படு ஸபீடாக இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

புத்தாண்டு பிறந்தவுடன், பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகளுக்கு அன்றாட செலவுகளுக்கு பணம் விநியோக்கும் வகையில் பட்ஜெட்டையும் தயாரித்து வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவையில் முகாமிட்டிருக்கும் நேரத்தில் தன்னை வந்து பூத் கமிட்டி நிர்வாகிகளும், திமுக முன்னணி நிர்வாகிகளும் எளிதாக சந்தித்து ஆலோசனைகளை பெறுவதற்கு வசதியாக கொடிசியா அரங்கு அருகே பங்களா டைப்பிலான வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்துவிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும், (தெற்கு தொகுதி பாஜக வசம்) அதிமுக வசம் இருந்தாலும்கூட, அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், ஒட்டுமொத்த கோவை மாவட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெறுவதற்கான வியூகத்தோடு அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி காட்டி வரும் தேர்தல் அரசியலைக் கண்டு உண்மையிலேயே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆடித்தான் போயிருக்கிறார்கள்.

படை பலம், பண பலம், ஆளும்கட்சிக்குரிய அதிகாரம் என அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, கொங்கு மண்டலத்தின் தலைமையிடமாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் திமுக கொடியை வெற்றிகரமாக பறக்க வைக்கும் தீரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்பு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக கூட்டம் தண்ணிதான் குடிக்க வேண்டியிருககும் என்றார் கோவை மாநகர திமுக நிர்வாகி..

அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி அரசியல் முன்பு அதிமுக தரப்பு ஆடிப்போயிருக்கும் இன்றைய தேதியில், அவரின் கட்டளைக்கு ஏற்ப வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளும் திமுக நிர்வாகிகளும் கோவை மாவட்டத்தில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உள்ளூர் திமுக முன்னணி நிர்வாகிகளிடம் தேர்தல் பணியை ஒப்படைக்காமல், கரூரில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக தலைமை இறக்கிவிட்டுவிட்டதே என்று புலம்பும் அவர்களின் அதிருப்தி குரல்கள், ஈனக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கள யதார்த்தம்.