கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் தீவில் குடியேறி, பாரம்பரிய முறையிலான மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3 ஆம் தேதி இரவு அந்த தீவின் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து இரும்பு படகில் 9 பேர் மீன்பிடிக்க, வழக்கம் போல கடலுக்குள் சென்றனர். இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு கச்சால் என்ற இடம் அருகே உள்ள தீவையொட்டிய கடலில் மீன்பிடித்தனர். 4 நாட்களுக்கு மேலாக கடலில் தங்கியிருந்து மீன் பிடித்த மீனவர்கள், 11 ஆம் தேதி கடலிலேயே படகை நங்கூரம் போட்டு நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக தூக்கத்தில் இருந்து எழுந்த மீனவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கடலில் வீசிய பலத்த காற்றின் காரணமாகவும், கடலில் அலைகள் அதிகமாகி கடலின் நீரோட்டமும் மாறியதால், நங்கூரத்தில் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்து, கரையை நோக்கி படகு வேகமாக நகரத் துவங்கியுள்ளது.
கரையை படகு தட்டினால் ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து அந்தமானில் உள்ள கடலோர கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலளித்த கடற்படையினர், தாங்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணி மேற்கொண்டிருப்பதாகவும், போர்ட் பிளேயரில் உள்ள கடற்படை முகாமுக்கு தகவல் தெரிவித்து, மீட்புப் படையை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆபத்து காலங்களில் வழக்கமாக செல்லும் கப்பல் படைக்கு பதிலாக சிறிய படகில் கடற்படை வீரர்கள் சென்றுள்ளனர். அதற்குள், மீனவர்களின் படகு கரையை நெருங்கி கடல் மணலில் சிக்கிக் கொண்டது. அந்த நேரத்தில் படகின் மையப்பகுதியில் ஏற்பட்டிருந்த சிறிய ஓட்டை மூலம் கடல் தண்ணீர் புகுந்துள்ளது. சிறிய படகில் சென்ற கடற்படை வீரர்களிடம் நவீன கருவிகள் ஏதும் இல்லாததால், மீட்புப் பணிக்கு பெரிய கப்பலை எடுத்து வருவதாக கூறிவிட்டு, படகில் இருந்த மீனவர்களின் ஆவணங்கள் மற்றும் படகு உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்துவிட்டு அவர்கள் போர்ட் பிளேயர் திரும்பி விட்டனர். இதனிடைய, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்து வந்த மற்ற படகுகள் மூலம், கரை தட்டிய படகை, கடல் தண்ணீருக்குள் இழுத்து வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, படகின் மையப்பகுதியில் இருந்த விரிசல் பெரிய அளவில் விரிவடைந்துவிட்டது. இதனால், குபுகுபுவென கடல் நீர் படகிற்குள் புகுந்ததால், அதில் இருந்த 9 மீனவர்களும் உயிருக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதுதொடர்பாக மீண்டும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்த போதும், அவர்கள் மீட்புப் பணிக்கு வரவில்லை. இதனால், கடலில் மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள், குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த பணி துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, குமரி மாவட்ட மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகளவு இருப்பதால், உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் 13 நாட்களுக்குப் பிறகு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகை இழந்துவிட்டு மிகுந்த மனவலியோடு குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட அனைவரும் கரைக்கு திரும்பினர்.
இதில் காயமடைந்த குமரி மீனவர் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். படகை இழந்து உயிர் பயத்தோடு போர்ட் பிளேயர் வந்த மீனவர்களை, அந்தமான் அரசாங்க அதிகாரிகளும கண்டுகொள்ளவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர், குழு, குழுவாக அந்தமானில் முகாமிட்டிருந்த போதும், ஆபத்தான காலத்தில் கூட தமிழக மீனவர்களை மீட்க, கடலோர கப்பல் படை உள்ளிட்ட முப்படைகளின் ஒரு பிரிவு கூட முயற்சி எடுக்கவில்லை என அந்தமான் மீனவர்கள் சங்கங்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.