Fri. Nov 22nd, 2024

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், பாதுகாப்புப் படை வீரர்களின் தலைவர் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 மரணம் அடைந்தனர். அப்போது நல்லவேளையாக அவர்களுடன் பயணம் செய்த குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வருண் சிங் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

அபாய கட்டத்தில் இருந்தாலும், மருத்துவ சிகிச்சையின் மூலமும், அவரது போராடும் குணத்தின் காரணமாகவும் வருண் சிங், குணமடைந்து திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அவரது தந்தையும், வருண் சிங்கின் மனவுறுதியை நினைவுக்கூர்ந்து, தனது மகன் எப்படியும் உயிருடன் வீடு திரும்புவார் என அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில், இன்று நண்பகலில் அனைவரின் நம்பிக்கையையும் குலைக்கும் விதமாக, வருண் சிங் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமான படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரின் மரணச் செய்தி கேட்டு, நாடு முழுவதும் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேப்டன் வருண்சிங்கின் தியாகத்தை நினைவுக்கூர்ந்து, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ராணுவ அதிகாரியான குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும் மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.