கட்டுரையாளர் – பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…..
சுமேரிய நகர அரசுகள்(கி.மு.4500-2900): நகர உருவாக்கம்தான் நாகரிகத்தின் தொடக்கம். மெசபடோமியா பகுதியில் சுமேரியா மக்களால் கி.மு. 5000 வாக்கில் எரிடு(Eridu) போன்ற பல சிறு நகரங்கள் உருவாகி இருந்தன. ஆனால் கி.மு. 4500 வாக்கில் உருவான உருக்(Uruk) தான் அதன் முதல் நகரம். கி.மு. 4100 முதல் 2900 வரை அது ஒரு புகழ் பெற்ற நகராக இருந்தது. அக்காலகட்டத்தில் ஊர்(Ur) என்ற நகரமும் மிகப்புகழ் பெற்ற நகராக இருந்தது. கி.மு. 5000 முதல் கி.மு. 2900 வரையான காலகட்டத்தில் மெசபடோமியாவில் நிறைய நகரங்கள் இருந்தன. கி.மு. 5000 முதல் கி.மு. 4100 வரையான காலகட்டம் என்பது உபைடு(Ubaid) காலகட்டம் எனவும், அதன்பிந்தைய கி.மு. 4100 முதல் 2900 வரையான காலகட்டம் என்பது உருக்(Uruk) காலகட்டம் எனவும் கூறப்படுகிறது.. இந்த 2000 வருட காலத்தில் சுமேரிய நாகரிகம் என்பது நகர நாகரிகமாக இருந்தது. எரிடு(Eridu), உருக்(Uruk), ஊர்(Ur), இலார்சா(Larsa), இசின்(Isin), அடாப்(Adab), குல்லா(Kullah), இலாகாசு(Lagash), நிப்பூர்(Nippur), கிசு(Kish) போன்ற பல புகழ்பெற்ற நகரங்கள் அங்கு உருவாகின. மனித வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் முன்னேற்றமும், வளர்ச்சியும் இது போன்ற நகர அரசுகளில்தான் உருவாகின. சுமேரியாவில் நகரஅரசுகள் – சமூகவளர்ச்சி: “கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரையான இரண்டாயிரம் ஆண்டுகள் பயன்பாட்டு அறிவியலில் புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டன. அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பல இலட்சக்கணக்கான மக்களின் வளமையைப் பாதித்தது. மேலும் நமது உயிரினத்தின் உயிரியல் நல்வாழ்வை எடுத்துக்காட்டும் வகையில் முன்னேற்றம் காணச்செய்தது. கால்வாய்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் ….. கலப்பை, மரக்கலப்படகு, சக்கர வாகனங்கள், பழத்தோட்ட வளர்ப்பு, பானங்கள் தயாரிப்பு, செம்பு உற்பத்தி மற்றும் பயன்பாடு, செங்கற்கள், வளைவுகள், கண்ணாடி செய்தல், முத்திரை ….. ஞாயிறு நாட்காட்டி, எழுத்து, எண்குறிப்பு, வெண்கலம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதற்குப் பிந்தைய 2000 ஆண்டுகள் மனித முன்னேற்றத்திற்கு ஒப்பீட்டளவிலான முக்கியத்துவம் கொண்ட பங்களிப்புகள் மிகச் சிலவற்றையே செய்துள்ளன. மேலும் நிகழ்ந்த முன்னேற்றங்கள்(இரும்பு, நீர்ச்சக்கரங்கள், அரிச்சுவடி, எழுத்துகள், தூய கணிதம்) கூட மாபெரும் நாகரிகங்களுக்குள் நடைபெறவில்லை. மாறாக விளிம்பிலிருந்த காட்டுமிராண்டி மக்களிடையே நிகழ்ந்தனவாகும்” என கார்டன் சில்டே(Gordon Childe) ஒப்பிடுவதாகக் கூறுகிறார் கிரிசு ஆர்மன்(Chris Harman)(2). இங்கு இவர் கூறும் ‘காட்டுமிராண்டி மக்கள்’ என்பன இனக்குழு நிலையிலிருந்து உருவான தொடக்க கால நகர அரசுகளின் நாகரிக மக்கள் ஆவர். நகர அரசுகள்தான் சுதந்திரமான சிந்தனைகளைக்கொண்டு புதிய கண்டு பிடிப்புகளுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளன என்பதை கிரிசு ஆர்மனின் கூற்றும் உறுதி செய்கிறது. கி.மு. 3600அளவில் சுமேரியன் நாகரிகம் சக்கரம், படகு, பாசனம் போன்றவற்றைக் கண்டுபிடித்தது. கி.மு. 3500அளவில் சுமேரியர்கள் வரலாற்றில் முதல்முதலாக ஒரு மொழிக்கான எழுத்தை(Hieroglyphs) உருவாக்கினர். அதன்பின் கி.மு. 3200அளவில் சுமேரிய மொழிக்கான வளர்ச்சிபெற்ற எழுத்துமுறை உருவானது.சுமேரியாவின்(அக்காடியன்) பேரரசுக்காலம்: கி.மு. 2900க்கு பிந்தைய காலகட்டம் என்பது பேரரசுகள் உருவான காலகட்டம். கி.மு. 2900 முதல் நகர அரசுகள் பேரரசுகள் ஆவதற்கான பல போர்களை நடத்தின. கி.மு. 2500இல் முதல் இலகாசு அரச வம்சம்(First Dynasty of Lagash) உருவாகும் வரை இப்போர்கள் நடந்தன. இப்பேரரசு சுமேரியாவின் பெரும்பகுதியையும், எலம்(Elam) என்பதின் ஒரு பகுதியையும் கொண்டதாக இருந்தது. ஏனட்டம்(Eannutum) என்ற அரசனின் கீழ் அது மிகப்புகழ்பெற்ற அரசாகத் திகழ்ந்தது. கி.மு. 2350 வாக்கில் இலகாசு அரசு வீழ்த்தப்பட்டு, சர்கான்(Sargon) என்பவனால் அக்காடியன் பேரரசு(Akkadian Empire) உருவாக்கப்பட்டது. அவனது காலம் கி.மு. 2370-2315. அவனது அரசு ஏனட்டம்(Eannutum) என்பவனது மாதிரியில் உருவாக்கப்பட்டது. இதுதான் முதல் முறையாக உருவாக்கப்பட்ட பல தேசங்களின் பேரரசு. அக்காடியன் மொழி அரசு மொழியாக இருந்தது. இதன்பின் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கட்டியன்(Gutian) காலகட்டத்தில்(கி.மு.2218-2047) அனைத்து நகரங்களும் அழிக்கப்பட்டன. அதனை இருண்ட காலம் என வரலாறு கூறுகிறது. இறுதி சுமேரியர்களின் அரசு கி.மு. 2047-1750( Ur III) வரை ஆள்கிறது. இக்காலகட்டம் ஒரு மிகச்சிறந்த காலகட்டம். இக்காலகட்டத்தில் ஆண்ட அரசர்களான, ஊர் நமு(Ur-Nammu) கி.மு.2047-2030, சுல்கி(Shulgi) கி.மு.2029-1982 ஆகியோர் மிகச்சிறந்த அரசாட்சியை வழங்கினர். இக்காலம் கலை, தொழில்நுட்பம் போன்ற பல துறைகளிலும் சுமேரிய மக்கள் பல சாதனைகளைச் சாதிக்க வழிவகுத்தது. இதன்பின் இசின் லார்சா என்பவன் புதிய அரச வம்சத்தைத் தொடங்கி வைத்தான். அதன் காலம் கி.மு. 1982-1760 வரை.. தொடக்க கால கியுனிபார்ம்(Proto-cuneiform) எழுத்துகளைக் கொண்ட கிசு களிமண் படிவங்களின்(Kish clay tablets) காலம் கி.மு. 3500. அதன்பின் இம்முறை வளர்ச்சியடைந்து, கி.மு. 3100 வாக்கில் இதனைக்கொண்டு முதல் ஆவணம் எழுதப்பட்டது. இந்த கியூனிபார்ம் எழுத்து முறையைக் கொண்டுதான், சுமேரிய ‘உருக்’ நகர அரசனான கில்காமெசு (Gilgamesh) குறித்துப் பண்டைய முதல் காவியம் எழுதப்பட்டது. இந்த கியூனிபார்ம் எழுத்துகளைக்கொண்டு சுமேரியன், அக்காடியன், எலாமைட் (Elamite), உறியன்(Hurrian), கிட்டைட்டி(Hittite), பாரசீகம் போன்ற பல மொழிகள் எழுதப்பட்டன. இதுதான் உலகின் முதல் எழுத்து முறை. ஆனால் கி.மு. 4000க்கு முன்பிருந்து பேசப்பட்ட சுமேரிய மொழி வழக்கிழந்து போய், கி.மு. 2000 முதல் அக்காடியன் மொழி மக்கள் மொழியாக ஆனது.பார்வை:1.மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி, 2016, பக்: 248 2.உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், விடியல் பதிப்பகம், சூலை-2017, தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார், பக்: 74.சான்று:1.Ancient Cities By Charles Gates 2nd edition, page: 30-602.The World Book Encyclopedia, USA, vol-18, 1988, page: 972,973.3.Ancient History Of Encyclopedia by Joshua J.Mark published on 28.4.2011.