Fri. Nov 22nd, 2024

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 123 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து அவர்களுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

அதன்படி கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள பேரூர் செட்டிப்பாளையத்தில் இன்று காலை 123 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்ச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மங்கல நாண் எடுத்து கொடுத்து 123 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர். திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்கினர்.

திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி, முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்களுக்கு மொத்தம் ரூ.6,010 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு இதுவரை 2.98 லட்சம் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்க தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தத்தில் 11 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுவதும் நிறைவேற்றிய கட்சி அதிமுக. 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால், கடைசிவரை அந்த நிலத்தைக் காட்டவே இல்லை. வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் கட்சி திமுக.

சிறப்பான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் அவிநாசி – அத்திக்கடவு திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்க பணி விரைவில் தொடங்க உள்ளது. தமிழ்நாடு தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில் முனைவோர் தொழில் செய்வதற்காக ஆர்வமாக தமிழகம் வருகின்றனர்/

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் பேசியதாவது,

ஏழைகளுக்கு உதவி செய்வது, அதிமுக மட்டும்தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்தி வருகிறார். பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளாக இருந்த திமுக – காங்கிரஸ் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.