Sat. Nov 23rd, 2024

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் அனைவருக்கும் அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்தார். நாள்தோறும் ஆற்றும் மக்கள் சேவை குறித்து அறிக்கையாக தயாரித்து மாதந்தோறும் திமுக தலைமை அலுவலகத்தில் திமுக எம்.பி.க்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை, வேதவாக்காக எடுத்துக் கொண்ட திமுக எம்.பி.க்கள், மாதந்தோறும் தொகுதி பணி தொடர்பான அறிக்கைகளை ஆர்வமுடன் வழங்கி வந்தனர். ஆனால், அதற்கடுத்த மாதங்களில் திமுக எம்.பி.க்களில் பலர், மாதாந்திர அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்காத போதும், சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மட்டுமே, ஒரு மாதம் கூட தவறாமல் மாதாந்திர அறிக்கையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கி வருகிறார் என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகி ஒருவர்.

அவர்களின் வியப்பில் பொய் இல்லை என்று உறுதியாக சொல்லும் அளவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட எம்.பி எஸ்.ஆர். பார்த்திபன், கூட்டத்திற்குப் பின்னர், 29 வது மாத அறிக்கையையும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

 ஒரு மாதம் கூட விடுபடாமல் தொடர்ந்து அறிக்கையை ஒப்படைத்து வரும் எஸ்.ஆர்.பார்த்திபனின் ஆர்வத்தை பார்த்து, அவரை பாராட்டியதுடன், சேலத்தில் அவர் ஆற்றி வரும் மக்கள் பணி குறித்து அறிந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியப்படைந்ததாகவும் தகவல் கசிகிறது. முதல்வரே வியந்து போகிற அளவுக்கு சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் அப்படியென்ன சேவைகளை செய்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள, சேலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.

சேலம் திமுக எம்.பி.எஸ்.ஆர். பார்த்திபனின் அன்றாட பணிகளை நேரில் பார்வையிடும் வாய்ப்பு பெற்ற ஒன்றிரண்டு சமூக ஆர்வலர்கள், திமுக எம்.பி.யின் அன்றாட மக்கள் சேவைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

சேலம் நகரத்தில் உள்ள அவரது எம்.பி. அலுவலகத்தில் நாள் தவறாமல் நூற்றுக்கணக்கானோர் குவிந்து விடுகின்றனர். அதிகபட்சமாக 500 பேர் கூட எம்.பி.யை தேடி அவரது அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்கள். பொதுமக்கள் எவ்வளவு பேர் வந்தாலும், அவர்கள் அமர்வதற்கு எம்.பி. அலுவலகத்தில் இருக்கைகள் இருக்கின்றன. வந்தவர்களை உபசரிக்கும் விதமாக முதலில் தேநீர் வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்து எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனே நேரில் மனுக்களை வாங்கி பொறுமையாக படிக்கிறார். சட்டத்திற்குட்பட்டு, கோரிக்கை மனுவுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிந்தால், உடனடியாக அரசு அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து பேசி, மனுக்கள் மீது தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கிறார். இப்படி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக எம்.பி பெறும் மனுக்கள், துறை வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குறுகிய நாட்களுக்குள்ளாகவே தீர்வு காணப்பட்டு விடுகிறது.

கடந்த 28 மாதங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் பெற்றிருப்பார். அதில், சில ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்படுவதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும் கூட, ஏறத்தாழ 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.  அந்த வகையில்,  எம்.பி. எஸ்.ஆர்.பார்திபனின் அன்றாட மக்கள் சேவை என்பது அபாரமானதுதான் என்றார் நல்லரசுக்கு அறிமுகமான சமூக ஆர்வலர் ஒருவர்.

நீண்ட காலம் சேலத்தில் பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளர் ஒருவரும் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனின் அன்றாட மக்கள் பணிகள் குறித்து வியப்புடனேயே விவரித்தார்.

சேலத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தை தேடி வரும் மாற்றுத்திறனாளிகள், தாய்மார்கள், விதவைகள் உள்ளிட்ட அனைவரையும் மிகுந்த மரியாதையோடு அணுகுவதிலேயே எஸ்.ஆர்.பார்த்திபனின் மனிதநேயமும், அரசியல் முதிர்ச்சியும் வெளிப்பட்டு விடுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமாக பயனளிக்கும் மூன்று சக்கர வண்டி உள்ளிட்டவற்றை எவ்வளவு விரைவாக அரசு துறையிடம் இருந்து பெற்றுத் தர முடியுமோ அவ்வளவு விரைவாக பெற்று தந்துவிடுகிறார் எம்.பி. மாற்றுத்திறனாளிகள் மீது காட்டும் கரிசனத்திற்கு துளியும் குறையாமல், தையல் இயந்திரம் கேட்டு வரும் விதவை பெண்களுக்கு, தனது எம்.பி. ஊதியத்தில் இருந்து தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தையல் எந்திரங்களை உடனுக்குடன் பெற்று வழங்குவதில் எஸ்.ஆர்.பார்த்திபன் காட்டும் அக்கறை, உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.

இதேபோல, வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதற்கும் முன்னுரிமை கொடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்கிறார் திமுக எம்.பி. பார்த்திபன். இதேபோல, மேல்நிலைப்பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் டிப்ளமோ, பட்டப்படிப்பு சேர்வதற்கும் முழுமனதோடு உதவி புரிந்து வருகிறார்.இதுவரை பல நூறு மாணவர்களுக்கு உயர்க்கல்வி கனவை நிறைவேற்றி வைத்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் 400 மாணவர்களுக்கு உயர்க்கல்வி வாய்ப்பை பெற்று தந்திருக்கிறார் எஸ்.ஆர்.பார்த்திபன் என்கிறார்கள், அவரால் உதவி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள். இதையெல்லாம் கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதேபோல, உயிர் பயத்தை ஏற்படுத்தும் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைக்கு பணம் இன்றி சிரமப்படும்போது, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து விரைவாக நிதியுதவி பெற்று தருவதற்காக, அவரது உதவியாளர் ஒருவரை டெல்லியிலேயே தங்க வைத்திருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு தேவையான பணஉதவி கேட்டு வரும் விண்ணப்பத்துடன், எம்.பி.யின் பரிந்துரை கடிதமும் பிரதமர் அலுவலகத்தில் உடனுக்குடன் வழங்கப்பட்டு, கேட்பவர்களே நம்புவதற்கு கடினமாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு ஒரு சில நாட்களிலேயே பிரதமரின் நிவாரண நிதியை பெற்று தந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. என்பதும், இதுவரை தமிழகத்தில் உள்ள எந்தவொரு எம்.பி.யும் நிகழ்த்திவிடாத சாதனையாக 3 கோடி ரூபாய் அளவுக்கு பிரதமரின் நிவாரண நிதி சேலம் மாவட்டத்திற்கு மட்டும் கிடைத்துள்ளதாக, எம்.பி. மூலம் பயனடைந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.

   ஆக மொத்தத்தில், சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி என 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பது என்பது ஒரு எம்.பி.க்கு சவாலான அம்சம்தான் என்றாலும் கூட அந்தந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கடந்த 7 மாதங்களில் தொகுதி மக்களிடம் இருந்து எவ்வளவு கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு கண்டிருப்பார்களோ, அதைவிட அதிகமாகவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு தேடி தந்திருப்பார் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் என்கிறார்கள், அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வமில்லாத கல்வியாளர்கள். அந்தவகையில், எஸ்.ஆர்.பார்த்திபனின் மக்கள் பணி சிறப்பாகவே அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் மூத்த ஊடகவியலாளர்.

நிறைவாக பேசிய எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் போது, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியபோது, பகல் இரவு என பாராமல், மக்களோடு மக்களாக நின்றார் எஸ்.ஆர்.பார்த்திபன் என்பதும், வெள்ள நீரை விரைந்து வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கியதாக இருக்கட்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எடுத்து கொண்ட சிரத்தையாகட்டும், அரசியல் பேதத்தை கடந்து பாராட்டும் வகையில்தான் இருந்தது. அதேபோல, சேலம் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள சந்நியாசிகுண்டு பகுதியில் 40  ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிரச்னைக்கு ஓரிரு நாட்களில் தீர்த்து வைத்தற்காக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனை மனதார பாராட்டிதான் ஆக வேண்டும். அந்த பகுதியில் உள்ள  பள்ளத்தை மேடாக்குவதற்காக 4 அடி அளவுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மண் கொட்டி, சமன் படுத்தியுள்ளார். இதன் மூலம் சிறிய மழைக்கே, வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சந்நியாசிகுண்டு பகுதி, இனிவரும் காலங்களில் மழைநீர் சிறிதளவிற்குகூட தேங்குவதற்கு வாய்ப்பே இல்லாத அளவுக்கு செய்துவிட்டார்.

ஆளும்கட்சி எம்.பி. தானே என்று அசட்டையாக இல்லாமல், அன்றாடம் மக்களை சந்திப்பதும், நலிவுற்ற, ஏழை எளிய மக்களின் துயரங்களை முடிந்தவரை துடைப்பதற்கு அரசு நிர்வாகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதிலும், எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் ரொம்பவே மெனக்கெடுகிறார். மேலும், எம்.பி.யாக வெற்றிப் பெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டபோதும்கூட,  அன்றாடும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. காட்டும் ஆர்வம், வியப்பிற்குரிய ஒன்றுதான். எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக ஆக்கப்பூர்வமாக பணியாற்றும் திமுக எம்.பி.யை அரசியல் கண்ணோட்டத்தோடு விமர்சனம் செய்யக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் என்றார் எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி…

பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோருக்கு பாராட்டுகள்தான் ஊக்க மருந்து. அந்த வகையில், மாதந்தோறும் அறிக்கைகளை பெற்றுக் கொள்ளும் அண்ணா அறிவாலயம், திமுக தலைமையின் அன்பு கட்டளைக்கு பெருமை சேர்க்கும் வகையில், திமுக எம்.பி.க்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், மக்கள் சேவையில் முன்னணியில் உள்ள திமுக எம்.பி.க்களை அடையாளப்படுத்தி, அவர்களை பாராட்டுவதற்கும் தயக்கம் காட்டக் கூடாது.