Fri. Nov 22nd, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஜெ.மேகநாத் ரெட்டி ஐஏஎஸ்…இவரின் டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படம், கடந்த 36 மணிநேரத்திற்குள் மூன்று முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணி குறித்து விசாரணையில் குதித்த போது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸின் சென்னையை கடந்தும் பாயும் நுட்பமான கண்காணிப்பு பணி பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரியான மேகநாத் ரெட்டி, திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர் போல… தல என்று பட்டப்பெயரை சூட்டி அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடுவதைப் போல, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் நேரத்திலும், தன்னுடைய அந்தஸ்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தனது ஆத்மார்த்தமான கதாநாயகன் அஜித்தின் அண்மைக்கால புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படமாக வைத்து குதூகலித்திருந்தார் மேகநாத் ரெட்டி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அன்றாட செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், அவரின் பக்கத்திற்கு சென்று பார்வையிட்ட சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அஜித்தின் வெறி பிடித்த ரசிகராகவே ஐஏஎஸ் அதிகாரி மேகநாத் ரெட்டி மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டத்திற்கே முதன்மை அதிகாரியான அவர், தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மறைத்து கொண்டு மக்கள்பணி ஆற்றாமல், வெளிப்படையாக, அதுவும் எதிர்காலத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், ரசிகர்களாக நின்று, தங்களுடைய கதாநாயகர்களை பகல், இரவு பாராமல் கொண்டாடி கொண்டு இருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க இளைஞர்களை போல, ஆட்சியர் மேகநாத் ரெட்டியும் இருக்கிறாரே என்று ஆதங்கம் அடைந்தனர்.

டிவிட்டர் பக்கத்தில் உள்ள அஜித்தின் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்று அவரது ஐஏஎஸ் நண்பர்கள் அறிவுரை கூறியபோதும், அதை புறக்கணித்திருக்கிறார் மேகநாத் ரெட்டி. அஜித் புகைப்படத்தோடு இருக்கும் அவரது டிவிட்டர் பக்கத்தை ஏபிபி நாடு இணைய தளம் தனது செய்தி தளத்தில் பகிர்ந்து, மேகநாத் ரெட்டியின் திரை மோகத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. அப்போதும் கூட உஷராகி, அஜித் புகைப்படத்தை அகற்றாமல், தனது கதாநாயகனின் விசுவாசமிக்க ரசிகராகவே காட்சியளித்துக் கொண்டிருந்தார் மேகநாத் ரெட்டி.

மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம் வாங்கும் ஒரு அரசு அதிகாரி, வெளிப்படையாகவே நடிகர் அஜித் ரசிகன் தான் என்பதை காட்டிக் கொண்டிருக்கும் தகவல், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசி வாயிலாக அழைத்து கடுமையாக கண்டித்ததுடன், நடிகர் புகைப்படத்தை நீக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு தலைமைச் செயலாளர் கடுமை காட்டியதன் விளைவாக, அஜித் படத்தை உடனடியாக நீக்கிவிட்டு, REMEMBER WHY YOU STARTED எனும் மேற்கோளை முகப்பு படமாக வைத்தார். ஒரு மாவட்டத்தின் முதன்மை அதிகாரியாக உள்ள அவர், மாவட்டத்தை முன்னிறுத்தாமல் தன்னையே மீண்டும் முன்னிறுத்தியதும் கூட விமர்சனத்திற்கு உரியதாகவே அமைந்தது.

இரண்டாவது முறையாக மாற்றப்பட்ட டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படமும் உயரதிகாரிகளை கடுப்பேற்றியதைப் போலவே, மேகநாத் ரெட்டியின் சக ஆட்சியர்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலாளர் முதல் சக அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு எழுந்ததையடுத்து, விளையாட்டுக் குணத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை, மாற்றியமைத்திருக்கிறார் மேகநாத் ரெட்டி ஐஏஎஸ்…

இளம்வயதில் ஐஏஎஸ் படித்து, ஆட்சி நிர்வாகம் குறித்து முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்கு பிறகு சில ஆண்டுகள் அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த பிறகும் கூட, அரசு அதிகாரி ஒருவர் சினிமா மோகத்தில்தான் இருக்கிறார் என்றால், அவரை ஆதர்ச நாயகனாக எடுத்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள விரும்பும் இளைஞர்களின் எதிர்காலம் என்னாகும்?

தலைமைச் செயலகத்தில் அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது தலைமையின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து, தவறு செய்யும் போது தயங்காமல் குட்டு வைப்பதும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் போது ஒரு நொடிப் பொழுதும் தாமதிக்காமல் பாராட்டு மழை பொழிவதிலும், தாய் அன்புக்கு மேலாகவே வெ.இறையன்பு ஐஏஎஸ் இருக்கிறார் என்பதை நினைக்கும் போது, கனிவானவர் மட்டுமல்ல, கண்டிப்பானவரும் கூட தலைமைச் செயலாளர் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

ஐஏஎஸ் அதிகாரி மேகநாத் ரெட்டி ஏற்கெனவே நல்லரசுக்கு அறிமுகமானவர்தான்…….