தொலைதூர ரயில் பயணத்தின் போது பயணிகளின் விருப்ப தேர்வுக்கு ஏற்ப மீண்டும் சமைக்கப்பட்ட உணவு வகைகளை வழங்கும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனோ தொற்று பரவ தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் தொலைதூர ரயில் சேவை மற்றும் உள்ளூர் ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி, தொலைதூர பயணத்திற்கு வசதியாக சிறப்பு ரயில் சேவை துவக்கப்பட்டது.
அதேபோல உள்ளூர் நகரங்களை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவையும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கு குறைவாக தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இருப்பதால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நாடு முழுவதும் அனைத்து தடங்களிலும் வழக்கம் போல ரயில் சேவையை துவங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்பேரில், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வந்த சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, வழக்கம் போல, அட்டவணைபடி ரயில்கள் இயக்கும் பணி, நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு தொலைதூர பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு வகைகளை மீண்டும் வழங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கையை எடுத்துள்ளது. துரித உணவு வகைகளுக்கு பதிலாக, பயணிகளின் விருப்ப தேர்வு அடிப்படையில் சுவை மிகுந்த சமைக்கப்பட்ட கலவை சாதம், சிற்றுண்டி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராயுமாறு ஐஆர்டிசி எனப்படும் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிஸம் கார்ப்பரேஷனுக்கு கடிதம் மூலம் ரயில்வே போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
ரயில் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சமைக்கப்பட்ட உணவு வகைகளை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ, அதற்கு கேற்ப நடவடிக்கைகளை எடுக்குமாறு ரயில்வே போர்டு தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.