Sun. Nov 24th, 2024

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் இருப்பவர், காவேரிப்பட்டு் கிராமத்தைச் சேர்ந்த உமா.

இவரது தந்தையான கன்ரங்கம் என்பவர் மொழிப்போர் தியாகி. 1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கூத்தாண்டகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக உமா பணியாற்றிய காலத்தில், அந்த கிராமத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை கட்டியமைத்தவர். மேலும் வளர்ச்சிப் பணிகளில் எந்த முறைகேடும் இன்றி நிறைவேற்றியதுடன், சிறந்த நிர்வாகி எனவும் பெயரெடுத்த உமாவை, அப்போது மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, உமாவின் தன்னலமற்ற சேவையை பாராட்டி விருது வழங்கி மரியாதை செய்துள்ளது.


மத்திய அரசுக்கு இணையாக, 2001 ஆம் ஆண்டில் அப்போது தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதுமு உமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து விருது பெற்றுள்ள உமா, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைபெற்ற தேர்தலில், கவுன்சிலராக வெற்றிப் பெற்றுள்ளார். திமுகவின் விசுவாசமிக்க நிர்வாகியான இவர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்ததுடன், தற்போது ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய திமுக செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இவரை தலைவராக தேர்ந்தெடுத்தால், கடந்த 1996 – 2001 ஆம் ஆண்டில் செயல்பட்டதைப் போல, மிகுந்த நேர்மையுடன் ஒன்றிய குழுத் தலைவர் பணியை ஆற்றுவார் என்று ஜோலார்பேட்டையில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நேரிடையாக பரிச்சயம் உடைய உமா, அநீதிக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பதில் முதல் நபர் என்பதுடன், ஆர்வம் மிகுந்த செயற்பாட்டாளர் என்றும் ஜோலார்பேட்டை மக்கள் உற்சாகமாக கூறுகிறார்கள்.


இப்படிபட்ட குணம் படைத்த உமாவிடம், ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி காந்தி என்பவர், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பொறுப்புக்கு வர முயற்சிக்காதே. யாருடனும் போட்டி போடாமல் அமைதியாக இருந்தால், உனக்கு துணை தலைவர் பதவியை பெற்று தருகிறேன் என பஞ்சாயத்து செய்கிறார்.


யார் ஒன்றியக் குழு தலைவராக வர வேண்டும், துணை தலைவராக யார் வர வேண்டும் என்று தீர்மானிக்கிற இடத்தில் ஒட்டப்பட்டி காந்தி இருக்கிறாரா என்று கேட்டால், அப்படியெல்லாம் அவருக்கு திமுகவில் தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை. அவரது மனைவி ஸ்ரீதேவியும் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கிறார். தனது மனைவியை ஒன்றியக் குழுத் தலைவராக்குவதற்கு முயற்சிக்கும் காந்தி, தனது மனைவிக்கு போட்டியாக உமா வந்துவிடக் கூடாது என்பதால், உமாவை போட்டியில் இருந்து விலகி விடு என்று மறைமுகமாக வற்புறுத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ஜோலார்பேட்டை திமுக நிர்வாகிகள்.

ஸ்ரீதேவி


காந்தியின் மனைவி ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு தலைவராகி விட முடியுமா? அந்தளவுக்கு செல்வாக்குப் படைத்தவரா? என்று கேட்டால் நக்கலாக சிரித்துக் கொண்டே, திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் பரிபூரண ஆசி பெற்றவர் ஸ்ரீதேவி என்கிறார்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள். மேலும், சாதி அரசியலையும் கையில் எடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார் காந்தி…

ஆலங்காயம் போலவே, ஜோலார்பேட்டையிலும் அமைச்சர் துரைமுருகன், அவரது புதல்வர் கதிர் ஆனந்த் ஆகியோர், ஜோலார்பேட்டையை உள்ளடக்கிய திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் எம்எல்ஏவிடம் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிதான், தேவராஜின் சொந்த தொகுதி. ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கான தலைவர் ரேஸில், உமா, ஸ்ரீதேவியுடன் மற்றொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்.
அவர் யாரென்றால், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சதீஷ்குமார் என்பவரின் மனைவியான சத்யா.

சத்யா சதீஷ்குமார்
சதீஷ்குமார்

இவரும் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே, தனது மனைவி சத்யாவை ஒன்றியக் குழுத் தலைவராக்க வேண்டும் என்றும் அப்படி அவரை தலைவராக்குவதற்கு ஆதரவு தருவதாக இருந்தால், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மொத்தமுள்ள 25 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த சதீஷ், சொன்ன வாக்கு மாறாமல் கிட்டதட்ட 2 கோடி ரூபாய்கு மேல் செலவழித்துள்ளார்.

அதன் காரணமாக, 18 வார்டுகளில் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த 6 பேரும், சுயேட்சை ஒருவரும் வெற்றிப் பெற்றுள்ளார்.


ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை ஒன்றியக் குழுத் தலைவர் பதவியும், துணைத் தலைவர் பதவியும் திமுகவுக்கு லட்டு போல எளிதாக கிடைத்து விடும். இந்த ஒன்றியத்தை பொறுத்தவரை திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் எம்எல்ஏ சொல்வதுதான் சட்டம். அவரும் சதீஷ் மனைவி சத்யாவே ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்து வருகிறார்.


இப்படி மும்முனைப் போட்டி என்று கூட சொல்ல முடியாது. உமாவும், ஸ்ரீதேவியும் பெரும்பான்மையான திமுக உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத நிலையில், ஒன்றிய குழுத் தலைவர் பதவியை பெற முயற்சிக்கிறார்கள்.


உமாவின் முயற்சியில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நோக்கத்திற்கு ஏற்ப நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்ற கொள்கை கொண்டவராக இருக்கிறார் உமா. ஆனால், ஒட்டப்பட்டி காந்திக்கும், அவரது மனைவியான ஸ்ரீதேவிக்கும் உள்ள ஒரே நோக்கம், அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதுதான்.

தங்களுக்கு அடிமையாக இருக்கும் ஸ்ரீதேவியை, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவியில் அமர வைக்க, தேவராஜ் எம்எல்ஏ தடையாக இருக்கிறார் என்பதை நேரடி பதில் மூலம் அறிந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், தனது ஆதரவாளர்ளை ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் சதீஷிடம் பேச சொல்கிறார்கள்.


அவரது ஆலோசனையின் பேரில், சதீஷை தொடர்பு கொண்ட அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளர்கள், ஸ்ரீதேவிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை விட்டு தந்தால், பெரிய நீர்த்தேக்கம் கட்டும் ஒப்பந்தம் உனக்கு (சதீஷ்) கிடைக்கும். அப்படியே அமைச்சர் துரைமுருகன் பேச்சை கேட்டு அவரது ஆதரவாளராக மாறினால், ஓராண்டுக்குப் பிறகு திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தேவராஜை நீக்கிவிட்டு, அந்த பதவியிலும் உன்னை அமர்த்துவார் என்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க கூடிய ஒப்பந்த பணி மற்றும் பதவி ஆசையை காட்டி சதீஷை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


அதற்கு நெற்றி பொட்டில் அடித்த மாதிரி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளராக தற்போது தான் வகித்து வரும் பதவியே எனக்கு பெரிய கௌரவமாக இருக்கிறது. இதற்கு மேலான பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. அதைப்போலவே, பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் பொருளாதார நிலையும் நன்றாகவே இருக்கிறது. கோடிக்கணக்கில் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. அதனால், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவராஜ் எம்எல்ஏ என்ன சொல்கிறாரோ, அதற்கு மட்டுமே கட்டுப்படுவேன். திமுக பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு நான் மரியாதை தருகிறேன், கட்டுப்படுகிறேன். அவர் சார்பாக பேசும் நீங்கள், தலைவர் தளபதியிடம் இருந்து ஒரு கடிதம் வாங்கி வந்து தாருங்கள். எனது மனைவி சத்யாவை போட்டியில் இருந்து விலக்கி கொள்கிறேன் என்று சுடச்சுட பதிலளித்துள்ளார் சதீஷ்.

இப்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில், தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஒன்றியங்களான (ஆலங்காயம், ஜோலார்பேட்டை) ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு, தனது ஆதரவாளர்களை நியமிக்க போட்ட திட்டம் தோல்வியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதை அறிந்து ஆவேசமாகியுள்ள அமைச்சர் துரைமுருகன், திமுக கவுன்சிர்களுக்கு உள்ளாகவே பிளவை ஏற்படுத்தி, அதிமுக, பாமக, சுயேட்சை கவுன்சிலர்கள் மூலம் ஆலங்காயம், ஜோலார்பேட்டை ஆகிய இரண்டு ஒன்றியங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, துடித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

அவரின் ஆசைகளை நிறைவேற்ற, ஓடியாடி வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கதிர் ஆனந்த் எம்பி என்று கூறும் திருப்பத்தூர் திமுக நிர்வாகிகள், எம்பி தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக கூட சட்டமன்றத் தொகுதிகள் பக்கம் எட்டிப் பார்க்காதவர், இப்போதாவது திமுக நிர்வாகிகளை தேடி தேடி ஆதரவுக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே, அந்த வகையில் சந்தோஷமாக இருக்கிறது என்று நக்கலடிக்கிறார்கள்..

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி ஆகியோரின் ராஜதந்திரங்கள் பலிக்குமா? நாளை வரை காத்திருக்க வேண்டும்….

கொசுறு தகவல் : ஜோலார்பேட்டை சட்டமன்றத் தேர்தலில் தன்னை தோற்கடித்த தேவராஜின் அரசியல் செல்வாக்கை அழிப்பதற்கு அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்துவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியும் சபதம் செய்து களத்தில் குதித்துள்ளாராம்...அந்த தகவல் கிடைத்ததில் இருந்து அமைச்சர் துரைமுருகனும் செம குஷியாக இருக்கிறாராம்.