இந்திய ஆட்சிப் பணியான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் படிப்பை முடித்து பொதுமக்களுக்கு சேவையாற்றும் பதவிகளில் அமர்வது என்பது இளம்தலைமுறையினரின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. சமுதாயத்தில் செல்வாக்குமிக்க இந்த பதவிகளில் அமர்பவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு ரோல் மாடல்களாக விளங்கி வருகின்றனர். தமிழகத்தில் இன்றைக்கு மாவட்டங்களில் ஆட்சியராகவும், காவல் துறை கண்காணிப்பாளராகவும் பதவி வகித்து வருபவர்களில் பெரும்பான்மையானோர் இளம்தலைமுறை ஐஏஎஸ், ஐபிஎஸ்கள்தான். இதேபோல, குடியுரிமைப் பணிகள் என்று கூறப்படும் ஐஆர்எஸ், ஐஎஃப்ஸ் உள்ளிட்ட பதவிகளும் கூட பெருமைக்குரிய ஒன்றாகதான் இருந்து வருகிறது.
மேல்நிலைக் கல்வி கற்கும் காலத்தில் இருந்தே லட்சியத்தோடு, மனவுறுதியோடு இருந்தால்தான் குடிமைப் பணிகளில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். குடிமைப் பணிகளில் வெற்றி பெற்று, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அமர்பவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மிகச் சிறந்த ஒழுக்க நெறிகளுடனேயே வாழ்கிறார்கள். அவர்களிலும் விதிவிலக்குகள் உண்டு என்றாலும் கூட அவரவர் தங்கள் இளமைக்காலங்களில் லட்சிய வெறியுடனேயே மக்கள் சேவையாற்றி வருகின்றனர். அப்படிபட்ட இளம்தலைமுறை அதிகாரிகளில், இந்திய வன அதிகாரி ஒருவர் 30 வயதை எட்டுவதற்கு முன்பாகவே, கஞ்சா போதைக்கு அடிமையாகியது மட்டுமின்றி, தனது இளம்வயது மனைவியையும் நாள்தோறும் அடித்து சித்ரவதை செய்து வருவது, வனத்துறை அதிகாரிகள் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வன அதிகாரியான (ஐஎஃப்எஸ்) அவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் டிவிஷன் மேலாளராக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய போது போதை பொருளான கஞ்சாவை பயன்படுத்த துவங்கியுள்ளார். தொடக்கத்தில் ஓய்வு நேரத்தில் பயன்படுத்தி வந்த அவர், குறுகிய காலத்திற்குள்ளாகவே கஞ்சா போதைக்கு அடிமையாகி ஓய்வு நேரம் மட்டுமின்றி அலுவல் நேரத்திலும் கஞ்சா போதையுடனேயே நடமாடும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கஞ்சா போதையில் நிதானமின்றி அவர் நடந்து கொண்டதைப் பார்த்து, அவரின் கீழ் பணியாற்றிய ஊழியர்கள் அச்சப்பட்டுள்ளனர். இளம் வயதிலேயே இப்படி கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டாரே அவர் என்று பரிதாபப்பட்ட தேயிலை தோட்ட பணியாளர்கள், கஞ்சா போதையில் இருந்து அவர் விரைவாக விடுபட வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபடும் அளவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மனமுருகி வேண்டியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
இளம் ஐஎஃப் எஸ் அதிகாரிக்கு அழகான, மனிதநேயமிக்க இளம் மனைவி இருக்கிறார். அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் அந்த அதிகாரி, தனது இளம் மனைவியை போதையில் கடுமையாக தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அவரின் சித்ரவதையை நாள் தோறும் அனுபவித்த அந்த அதிகாரியின் இளம் மனைவி, தனது கணவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்புகிறார் என்றாலே நடுநடுங்கிப் போய், குடியிருந்து வந்த வனத்துறைக்கு சொந்தமான இல்லத்தின் வாசலில் வந்து நாள்தோறும் அமர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்
போதையில் வீட்டிற்கு திரும்பும் கணவர், வீட்டிற்குள் வந்தவுடன் மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்தது வெளியுலகத்திற்கு தெரியாத அளவுக்கு ரகசியமாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறது. கணவரின் அன்றாட சிதரவதையை தாங்கி கொள்ள முடியாத அந்த இளம் மனைவி, கணவரின் சித்ரவதை குறித்து இரு வீட்டு பெரியவர்களிடம் சொல்ல கூட தைரியம் இல்லாதவராக இருந்திருக்கிறார். அதே சமயம், கணவரின் சித்ரவதையும் தாங்கி கொள்ளும் அளவிற்கு உடலிலும் உள்ளத்திலும் பலம் இல்லாத அளவிற்கு அவர் மெலிந்து போய்விட்டார். இந்தநிலையில், கணவரின் சித்ரவதையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த இளம் மனைவி, அலுவலக பணி முடிந்து கணவர் வீடு திரும்பும் நேரமாக பார்த்து, வீட்டு வாசலில் வந்து அமர்ந்து கொள்வதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளார். இளம் அதிகாரியின் மனைவி, தனது கணவர் வீடு திரும்பும் நேரமாக பார்த்து வாசலில் வந்து அமர்ந்து கொள்வதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்கள், பல நாட்களுக்குப் பிறகு பொறுமையை இழந்து, அந்த பெண்ணிடம் தயங்கி தயங்கி விசாரித்துள்ளனர். அப்போது தனது மனதில் பூட்டி வைத்திருந்த வேதனையை அழுகையோடு விவரித்துள்ளார்.
அவரின் துயரத்தை, அவரது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்ற அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்ள, மேல் அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது. வன அதிகாரி, உண்மையிலேயே கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளாரா என்பதை அறிந்து கொள்ள, உயர் அதிகாரி ஒருவர், நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்து சென்று அவரின் அலுவலக அறை, அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்ட போது, குளியல் அறை, அலுவலக அறையில் உள்ள மேஜை உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா தூள் அடைக்கப்பட்ட சிறு சிறு பொட்டலாமாக கிடைத்துள்ளன. அதை பார்த்து அதிர்ந்து போன அந்த உயர் அதிகாரி, தனது மேல் உயரதிகாரிகளுக்கு உண்மை தகவல்களோடு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதன் பேரில், அந்த இளம் அதிகாரியை மலை மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்துள்ளனர். அந்த அதிகாரியின் பெயரிலேயே இன்னொரு அதிகாரியும் வனத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பணி இடத்திலாவது அந்த இளம் அதிகாரி, கஞ்சா போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு, தெளிந்த மனநிலையில் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாரா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு, உயர் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் தடையை மீறி போதைப் பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் வேளையில், வனத்துறையைச் சேர்ந்த இளம் அதிகாரி ஒருவரே கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதும் போதையில் அவரது மனைவியை சித்ரவதை செய்து வருகிறார் என்ற தகவல்களும் வெளியாவதை கொஞ்சம் ஜீரணிக்க கூட முடியவில்லை.
போதைப் பழக்கம் உள்ள அந்த இளம் அதிகாரியை கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கும் அதே சமயம், அவரை தனிமைப்படுத்தி, போதைப் பழக்கத்தில் இருந்து அவர் முழுமையாக விடுதலையாகும் வரை அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதுதான் மிகவும் அவசியமான ஒன்று என்று அவரது நண்பர்கள் உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார்கள்.