9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதா? என்று கேள்வி கேட்பவர்கள் கூட, ஆலங்காயத்தில் நடைபெற்ற வன்முறையை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுவும் திமுக கவுன்சிலர்களுக்குள் மோதலாமே? என்று எதிர்கேள்வி கேட்கும் அளவுக்கு ஆலங்காயம் வன்முறை தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டது. எந்த பின்னணியில் இந்த வன்முறை நடைபெற்றிருக்கிறது?
“9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியான திமுக வன்முறையில் ஈடுபட்டது, மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் பட்டியல் வாசித்துக் கொண்டிருந்த போது, ஆலங்காயத்தில் வன்முறை வெறியாட்டம் உச்சத்தில் இருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சில்களுக்குள் மோதல் மூல யார் காரணம்? ஆலங்காயத்தை உள்ளடக்கிய திருப்பத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கையை காட்டுவது, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது புதல்வர் கதிர் ஆன்ந்த் எம்.பி.யை நோக்கிதான்.
பொன் விழா நாயகர் என்று கொண்டாடும் அளவிற்கு 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும் அமைச்சர் துரைமுருகன் பெயர் இதில் ஏன் அடிபடுகிறது? அவரது புதல்வர் கதிர் ஆனந்திற்கும் ஆலங்காயம் வன்முறைக்கும் என்ன தொடர்பு? விசாரணையில் ஈடுபட்டபோது, தந்தைக்கும், தனையனுக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட், அதாவது ஒரே சிந்தனை உள்ளது. அதனால்தான் திமுக நிர்வாகிகளுக்குள்ளேயே ரத்தவெறி தலை தூக்க ஆரம்பித்துவிட்டது என்ற அதிர்ச்சிக்கரமான தகவல்கள் அலையென எழுகிறது.
விசாரணையில் கிடைத்த முழு தகவல் இதுதான்..
திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரண்டு புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஆளுமைமிக்க தலைவராக திகழ்ந்தவர் துரைமுருகன். காட்பாடி தொகுதியில் இருந்து 8 முறை தொடர்ச்சியாக வெற்றிப் பெற்று வருபவர். அவர் கண்ணசைவில்தான் ஒட்டுமொத்த திமுகவும் இருந்தது. ஆனால், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களை தலைமையிடமாக கொண்டு இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டவுடன், புதிய மாவட்டங்களுக்கு முறையே தேவராஜ் எம்.எல்.ஏ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டநிலையில், அமைச்சர் காந்தி மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட பஞ்சாயத்தில், அமைச்சர் துரைமுருகன், அவரது புதல்வர் கதிர் ஆனந்த் ஆகியோர் மூக்கை நுழைக்க அமைச்சர் காந்தி துளியும் அனுமதிப்பதில்லை.
வேலூர் மாவட்ட செயலாளரான நந்தகுமார் எம்.எல்.ஏ., அரசியலில் மூத்தவர் என்பதால் அமைச்சர் துரைமுருகனின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டு வந்தாலும் கூட தனது மனதிற்கு எது நியாயம் என படுகிறதோ, அந்த பாணியில் நடந்து வருகிறார். இப்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுமே கட்சி நிர்வாகம் என்ற அடிப்படையில் அமைச்சர் துரைமுருகன் கட்டுப்பாட்டில் இல்லை. இப்படிபட்ட சூழ்நிலையிலும், திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் பதவி உயர்வு பெற்றுவிட்டாலும் கூட, இந்த மூன்று மாவட்டங்களும் தன் பிடிக்குள்தான் இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடனேயே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே சிந்தனையோடு இருக்கும் கதிர் ஆனந்தும் தனது தந்தையின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த மாவட்டங்கள் தனக்கும் சலாம் போட வேண்டும் என்று எல்லை மீறி அரசியல் சித்துவிளையாட்டுகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள்தான், அனுபவமிக்க, மூத்த திமுக நிர்வாகிகளை கொந்தளிக்க வைக்கிறது.
தந்தை, தனையன் ஆகியோரின் பரம்பரை பண்ணையார் தனத்தை மூன்று மாவட்டங்களிலும் உள்ள பெரும்பான்மையான திமுக நிர்வாகிகள் ரசிக்கவில்லை. ஆனால், சமயம் கிடைக்கும் போதெல்லாம், அமைச்சர் துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த்தும் சீண்டி, மூன்று மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகளிடையே காணப்படும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் பகைமை உணர்வுகளை கொளுந்துவிட்டு எரிய எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நடுநிலையான திமுக நிர்வாகிகள்.
தந்தை, தனையன் ஆகியோரின் ஆதிக்க வெறிக்கு முதலில் பலியாகியிருப்பவர் திருப்பத்தூர் மாவட்ட செயலாரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜ்தான். இவரது மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியம்தான் ஆலங்காயம். இங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள18 வார்டுகளில் திமுக 11 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கிறது. இதில், தேவராஜின் மருமகள் காயத்ரியும் ஒருவர். அவரை ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யும் பணியில் துவக்கம் முதலே ஈடுபட்டு வருகிறார். அவரின் விருப்பத்தை, திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகனுக்கு, மூத்த அமைச்சர் எ.வ.வேலு மூலமும், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.பன்னீர்செல்வம் மூலமும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும், தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு தந்தையும், தனையனும் கச்சைக்கட்டி கொண்டு களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இருவரும் யாரை ஆதரிக்கிறார்கள் தெரியுமா? ஏலகிரியில் உள்ள இவர்களுக்கு சொந்தமான பண்ணை இல்லத்தை பராமரித்து வரும் பாரி என்பவரின் மனைவி சங்கீதாவை ஒன்றியக் குழு தலைவராக்க முயற்சிக்கிறார்கள். இந்த பிரச்னையில் துரைமுருகன் தரப்பு வைக்கும் வாதம் என்னவென்றால், தேவராஜ், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். அவரது புதல்வர் கட்சிப் பதவியிலும் உள்ளார். இப்போது அவரது மருமகளையும் ஓன்றியக் குழு தலைவராக்க வேண்டுமா? என்ற கேள்வியைதான் முன்வைக்கிறார்கள்.
அதற்கு எதிர்தரப்பான தேவராஜ் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதம், துரைமுருகனின் துரோக அரசியலை பட்டுவர்த்தனமாக வெளிப்படுத்துவதாக உள்ளதுதான் வேதனை. திமுக பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன், காட்பாடி எம்.எல்.ஏ., அமைச்சராகவும் இருக்கிறார். அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யாகவும் உள்ளார். 80 வயதான துரைமுருகன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் காலத்தில் இருந்து அரசியலில் இருப்பவர். இப்படிபட்டவர், இன்னும் 6 மாத காலத்தில் திமுக ஆட்சிக்க வந்துவிடும் என்று தெரிந்திருந்த போதும், தளபதி மு.க.ஸ்டாலினை கேவலமாக விமர்சனம் செய்து கொண்டிருந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் போய் கெஞ்சி, தனது மருமகளான சங்கீதாவை (கதிர் ஆனந்த் மனைவி) பொதுப்பணித்துறையின் நெம்பர் 1 கான்ட்ராக்டராக பதிவு செய்ய உதவி கேட்டவர்தானே துரைமுருகன்?
. திமுக எனும் மாபெரும் இயக்கத்தையே அதிமுகவிடம் அடகு வைத்தவர், திருப்பத்தூர் மாவட்ட செயலாளரான தேவராஜ் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கேள்வி எழுப்ப என்ன யோக்கியதை இருக்கிறது? என்று அசிங்கம், அசிங்கமாக கேட்பதை காது கொடுத்து கூட கேட்க முடியவில்லை. இப்போது ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியங்களுக்கு தனது ஆதரவாளர்களான சங்கீதா, ஸ்ரீதேவி ஆகிய இரண்டு பெண் நிர்வாகிகளுக்காக வன்முறையை தூண்டிவிடும் அளவுக்கு தந்தையும், தனையனும் அவர்களின் தகுதிக்கு கீழாக இறங்கி வேலை செய்கிறார்களே? இருவரும் இந்த இரண்டு ஒன்றியங்கள் உள்பட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பிரசாரம் செய்தார்களா என்ன?
அமைச்சர் துரைமுருகனுக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போல, தான் இறக்கும் வரையிலும் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்ததைப் போலவும், அவரது வாரிசுகள் பலருக்கு அரசியலில் பதவியை பெற்று தந்ததை போலவும் தானும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பாவம் என்ன செய்வது, அவருக்கு இருப்பது ஒரே ஒரு வாரிசு கதிர் ஆனந்த் மட்டும்தானே. அதனால், தன்னை அண்டியிருக்கும் ஒன்றிரண்டு பேருக்கு திமுகவிலும் உள்ளாட்சிகளிலும் பதவியை பெற்று தந்துவிட தந்திரமாக காய் நகர்த்துகிறார். அவரது பாணியிலேயே அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யும் அடிபோடுகிறார்.
எவ்வளவு பெரிய தலைவர் துரைமுருகன்? அரசியலில் தான் நினைத்ததையெல்லாம் சாதிக்க, சாம,தான, பேத, தண்டத்தை எல்லாம் பயன்படுத்துகிறார். அவரின் நிலையை பார்த்தால் ஒருபக்கம் கேவலமாகவும், மறுபக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.
ஆலங்காயம் மோதலுக்குப் பின்னர் நேற்றிரவு திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ., மற்றும் ஆலங்காயம் ஒன்றிய திமுக செயலாளர் முனிவேல் ஆகியோரை தனது இல்லத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்போது, தன் பண்ணை வீட்டில் பணியாளராக உள்ள பாரிதான், ஆலங்காயம் வன்முறைக்கு எல்லாம் காரணம் என்பதை மறந்துவிட்டு, தங்களது விருப்பத்தை நிறைவேற்றதான் பாரி, திமுக மாவட்ட செயலாளரையே எதிர்த்து அரசியல் செய்கிறார் என்பது ஊருக்கே தெரிந்திருந்த போதும் கூட, அப்படியொரு சம்பவமே நடக்காததைப்போல, தேவராஜ், முனிவேலிடம், பாரி எங்கே போய்ட்டான். அவனை கண்டிச்சு வையுங்கள் என்று அட்வைஸ் செய்தவாறே, தேவராஜை நோக்கி, ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு ஒட்டப்பட்டி காந்தி மனைவி ஸ்ரீதேவியை (இவர், துரைமுருகன், கதிர் ஆனந்த்திற்கு மிகவும் நெருக்கமானவர்) ஒன்றியக் குழு தலைவராக்கி விடு. உனது மருமகளை ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவராக்குவது எனது பொறுப்பு எனறு டீலிங் பேசியுள்ளார் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன்.
அப்போது கூட, தனது மருமகளை ஒன்றியக் குழு தலைவராக்குவேன் என்று உறுதியளிக்கிறாரே அமைச்சர் துரைமுருகன், அதற்காவது, துரைமுருகனின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கவில்லை தேவராஜ் எம்.எல்.ஏ. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக இருந்தாலும் கூட அநியாயத்திற்கு துணை போக மாட்டேன் என்ற உறுதியோடு துரைமுருகனின் ஆலோசனையை புறக்கணித்துள்ளார் தேவராஜ்.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு மொத்தம் 25 கவுன்சிலர்கள். தேர்தலின் போது இந்த 25 வார்டுகளிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அளவுக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய(மேற்கு) செயலாளர் சதீஷ் தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார். அவரது மனைவி சத்யாவும் கவுன்சிலராக வெற்றிப் பெற்றிருக்கிறார். அவரது மனைவி சத்யாவை, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவராக்குவதுதான் நியாயமாகவும், திமுக தலைமைக்கும் விசுவாசம் காட்டுவதாகவும் இருக்கும் என்று நேருக்கு நேர் அமைச்சர் துரைமுருகனிடம் கூறியிருக்கிறார் தேவராஜ் எம்.எல்.ஏ
அமைச்சர் துரைமுருகன் மற்றும் தேவராஜ் எம்எல்ஏ இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை நல்லரசுவிடம் தெரிவித்த திமுக நிர்வாகிகள் முத்தாய்ப்பாக கூறியது, எதிர் தரப்பினரிடம் சமரசம் பேச துணிந்த அமைச்சர் துரைமுருகன், ஆலங்காயத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் எல்லோரையும் அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தேவராஜ் மீது நம்பிக்கை இல்லாமல், பாரி மனைவி சங்கீதா உள்பட 5 திமுக கவுன்சிலர்களை ஓசூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான சொகுசு ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு, அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்களுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, தேவராஜுக்கு குழி பறிக்கும் குள்ளநரித்தனத்தை கண்டுதான் ஆவேசமாகிவிட்டார் தேவராஜ் என்கிறார்கள்.
இதைவிட கொடூரமாக, தனது குடும்பத்திற்கு எதிராக இருப்பதுடன், நேருக்கு நேராக தன்னை எதிர்த்து பேசிய தேவராஜை, அரசியலில் இருந்தே ஒழித்துவிடும் அடுத்த அஸ்திரத்தை எடுத்துள்ளாராம் பெரிய மனிதரான அமைச்சர் துரைமுருகன் என்கிறார்கள் திருப்பத்தூர் திமுக நிர்வாகிகள்.
ஜோலார்பேட்டை திமுக ஒன்றியச் செயலாளர் சதீஷிடமும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவமானப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முழுத் தகவலையும் திரட்டி இன்று மாலை 5 மணிக்கு சதீஷ் துரைமுருகன் இடையேயான பஞ்சாயத்தும் விரிவாக வெளியிட இருக்கிறது நல்லரசு….