Thu. Nov 21st, 2024

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொத்த மாவட்டமான சேலத்தில் 11 தொகுதிகள் இருக்கின்றன. இதில், மலைவாழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய பிரதான அரசியல் கட்சிகளில் ஒரு பஞ்சாயத்து நடைபெறுவது வழக்கம். அது என்னவென்றால், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, கடல் மட்டத்தில் இருந்து 5, 326 அடி உயரத்தில் இருக்கிறது. ஏற்காடு பெயரால் உள்ள சட்டமன்றத் தொகுதியில் மூனறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஏற்காடு, அயோத்தியாப்பட்டனம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அடங்கியுள்ளன. மலையின் மேல் உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின பகுதி மக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துவார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிக்கும் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களைதான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்குவார்கள். இந்த பஞ்சாயத்து, ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும், ஏற்காடு தொகுதியில் வாடிக்கையாக நடைபெறும்.


இப்படி நகரம், கிராமம் என கலைவையாக உள்ள ஏற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சித்ரா என்பவர். இவர், 2016 ஆம் ஆண்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த அத்தனை அ.தி.மு.க நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். ஏற்காட்டில் உள்ள மலை கிராமமான மஞ்சக்குட்டையைச் சேர்ந்த சித்ராவும், அவரது கணவர் குணசேகரனும், ஊராட்சி அளவிலான சாதாரண கட்சிப் பதவிகளில்தான் இருந்தனர். ஏற்காடு தொகுதிக்கான வேட்பாளர் தேர்வை, சேலம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், தமிழநாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவனிடம், இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்தார். அன்றைய தேதியில், செல்வாக்குமிக்க அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சித்ராவை தேர்வு செய்து, அ.தி.மு.க.வேட்பாளராக செய்ததில், இளங்கோவனின் பங்கு முக்கியமானது.

அவரது கடைக்கண் பார்வையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சித்ரா, ஆரம்ப கட்ட தேர்தல் செலவுகளுக்குகூட தடுமாறினார். ஏற்காட்டில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொகுதி முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர், தங்கள் கைகாசை செலவழித்து உழைத்து சித்ராவின் வெற்றியை உறுதி செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், சித்ராவும், அவரது கணவர் குணசேகரனும், அ.தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகளுக்கு நள்ளிரவு நேரங்களிலும் சென்று கதவைத் தட்டி, கதராடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களின் ஒத்துழைப்பையும் கண்ணீர் மல்க வேண்டி பெற்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த சித்ராவின் பின்னணியை பார்க்காமல், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உயிரைக் கொடுத்து வேலை செய்தனர். அப்போது சேலம் மாவட்ட அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் பணத்தை வாரி வாரி வழங்கியதால், 2016 தேர்தலில் 1,00, 562 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.தமிழ்ச்செல்வன் 83,168 வாக்குகள் பெற்று 17,394 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மறுநாளில் இருந்தே சித்ராவிடம் இருந்து அதிகார திமிர் வெளிப்பட்டதை கண்டு, ஏற்காடு அ.தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியடைந்தனர். தேர்தலின்போது யார்,யாரையெல்லாம் வீடுதேடி சந்தித்து காலில் விழுந்து வாழ்த்துக் பெற்றாரா, அந்த நிர்வாகிகள் ஒருவரைக் கூட எம்.எல்.ஏ., ஆன பிறகு சித்ரா மதிக்கவே இல்லை என்று மனம் நொந்து சொல்கிறார்கள் ஏற்காடு அ.தி.மு.க. பிரமுர்கள். வயதில் மூத்த நிர்வாகிகளுக்கு கூட மரியாதை தராமல், சித்ரா அவமதித்தால், அவரின் பார்வையிலேயே இனிமேல் படக்கூடாது என்று ஒதுங்கிக் கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் உள்ளதாக எம்.எல்.ஏ.வின் விசுவாசிகள் குமறுகிறார்கள்.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட எந்த பகுதியில் அரசு தரப்பில் எந்தவொரு சின்ன வேலை நடந்தாலும் தனக்கு 20 சதவிகிதம் கமிஷன் தர வேண்டும் என கறார் காட்டி வந்ததால், எம்.எல்.ஏ. சித்ரா பெயரைக் கேட்டாலே பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகான கடந்த நான்காண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துவிட்டதாக சித்ரா மீது புகார் வாசிக்கிறார்கள் ஏற்காடு அ.தி.மு.க. நிர்வாகிகள். கூவத்தூர் கவனிப்பு மூலம் கிடைத்த வெகுமதிகளைக் கொண்டு, சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான மாளிகை வீடு ஒன்றை அதிக விலைக்கு கொடுத்து வாங்கியுள்ளார் எம்.எல்.ஏ. சித்ரா என்பதையும் பெருமையாக கூறித் திரிகிறார்கள் அவரது விசுவாசிகள். சித்ரா எம்.எல்.ஏ.வின் அதிகார திமிர், பேராசை, அதிகாரிகளை மிரட்டி அடாவடியில் ஈடுபட்டது போன்ற செயல்பாடுகளால், தொகுதி முழுவதும் அ.தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. இதனால், ஏற்காடு தொகுதியில் இந்த முறை அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான சாதகமான அம்சங்கள் என்று வெளிப்படையாக பேச்சு எழுந்து இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் மூடில் செல்வாக்குமிக்க அ.தி.மு.க. பிரபலங்கள் பலர், ஒதுங்கிக் கொண்டதாகவும் ஏற்காட்டில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

சித்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என்று முதல்வர் இ.பி.எஸ். கறாராக சொல்லிவிட்டதால், அவரது விசுவாசியான இளங்கோவன், தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை தேர்வு செய்து ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள் அ.தி.மு.க. முன்னோடிகள். இப்படி அ.தி.மு.க.விற்குள் நிலவும் குழப்பத்தாலும், அ.தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி பொதுமக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தி.மு.க. சார்பில் தேர்தல் களத்தைச் சந்திக்க, கடும் போட்டி நிலவுகிறது.
அதில் முன்னணியில் இருப்பவர், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட வெ.மாறன் பெயர்தான் பரவலாக பேசப்படுகிறது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவர், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்.

ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால, தொகுதி முழுவதும் இவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. இளைஞரணியைச் சேர்ந்தவர் என்பதால், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூலம் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பெற முழுவீச்சில் தயாராகி வருகிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், விவசாயம் மற்றும் வாகனப் போக்குவரத்து தொழிலிலும் ஈடுபட்டு வருவதால், பொருளாதாரத்திலும் வலிமையோடு இருக்கிறார்.

இவரைப் போலவே, பகுடுபட்டு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் தீ.சிவராமன் என்பவரும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக சேலம் மாவட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதே கிராமத்தின் கிளை கழகச் செயலாளராகவும் உள்ள சிவராமன், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட சின்ன கல்ராயன்மலை முழுவதும் புகழ் பெற்றவராக இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பாக கூறப்படுகிறது. மலைக் கிராம இளைஞர்களின் உயர்கல்விக்கு தேவையான ஆலோசனைகள், பண உதவிகளை தாராளமாக செய்து வருவதாலும், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் முழுமையாக பழங்குடியின மக்களுக்கு சென்றடைவதற்கான வழிகாட்டல்களையும், தேவையான உதவிகளையும் சிவராமன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருவதால், சிவராமனும் தகுதியான வேட்பாளர்தான் என்று ஏற்காடு தி.மு.க. நிர்வாகிகளும் பூரிப்புடனே கூறுகிறார்கள். தன்னுடைய தொழிலையும், மக்கள் சேவையையும் இரு கண்களாக பாவித்து, நலிவுற்ற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தன்னலமற்ற முறையில் உழைத்து வரும் சிவராமன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் என்பதை கூடுதல் சிறப்பம்சமாக ஏற்காடு தொகுதி மக்கள் பார்க்கின்றனர். இவரைப் போலவே, இவரது மனைவியும் மக்கள் சேவகராக இருக்கிறார் என்பதுதான், இவர்களது சொந்த மண்ணையும் கடந்து பல பகுதிகளில் சிவராமனை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள் விளிம்பு நிலை மக்கள். தொழில் சம்பந்தமாகவும், பொதுசேவை தொடடர்பாகவும் ஏற்காடு தொகுதிக்குள்ளேயே சிவராமன் சுற்றிக் கொண்டிருப்பதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட பல்வேறு தரப்பினரும் சிவராமனை அறிந்திருக்கிறாகள் என்பதுதான் அவருக்கான பிளஸ் பாயிண்ட்டுகள்.

ஏற்காடு தொகுதி முழுவதும் பரவலாக அறியபட்டவராகவும் இருக்கிறார் இவரது மனைவி, பூங்கொடி. அதற்கு காரணம், அவரும் மக்கள் பிரதிநிதியாக சேவையாற்றி வருவதுதான். தெற்கு நாடு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதாலும், கணவர், மனைவி ஆகிய இருவரின் மக்கள் சேவையும் தொகுதி மக்களும் பரவலாக சென்றடைந்திருக்கிறது.
மாறனும், சிவராமனும் ஏற்காடு தொகுதி தங்களுக்குதான் என இருவரும் நம்பிக்கையோடு காத்திருக்க, ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென் என்று கோதாவில் குதித்துள்ளார் பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ரேவதி மாதேஸ்வரன்.

பி.எஸ்.சி. பட்டதாரியான இவரும், ஏற்காடு தொகுதியை குறி வைத்து, சேலம் மாவட்ட தி.மு.க. முன்னணி தலைவர்கள் மூலம் தி.மு.க. தலைமையிடம் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். கடந்தாண்டு முழுவதும் கொரோனோ தொற்று ஏழை மக்களை படாதபாடு படுத்திய போது, கொரோனோ நோய் தொற்று பற்றி கவலைப்படாமல், தி.மு.க. தலைமை அறிவித்த ஒன்றினைவோம் வா நிகழ்வை முன்னெடுத்து, கிராம மக்களுக்கு உணவுப் பொருள்களை வாரி வழங்கியிருக்கிறார் என்பதையும் நன்றி மறவாமல் மக்கள் இன்றைக்கும் பேசுகிறார்கள். இதன் காரணமாக, ரேவதி மாதேஸ்வரனும், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரபலமாக உள்ளார்.

பெண் வேடபாளருக்கு முன்னுரிமை என்று தி.மு.க. தலைமை கருதினால், ரேவதிக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்கிறார் சேலம் மாட்ட தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர்

இருப்பினும் இன்றைய நிலையில், மாறனுக்கும், சிவராமனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. மக்கள் சேவகர் என்ற தகுதியின் அடிப்படையில் மாறனை முந்திக்கொண்டு சிவராமன் முன்னணியில் இருக்கிறார் என்று அண்ணா அறிவாலய நிர்வாகி ஒருவர் ரகசியமாக கண்ணடிக்கிறார்.


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சித்ராவுக்கு எதிரான அதிருப்தி ஏற்காடு தொகுதி முழுவதும் அதிகமாக பரவியிருப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்பதால், மாறன், சிவராமன், ரேவதி மாதேஸ்வரன் ஆகிய மூவரும், அவரவருக்கு உரிய வழிகளில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்த மூவரில் ஒருவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று நம்பிக்கையோடு கூறும் ஏற்காடு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், இந்த முறை அ.தி.மு.க.வை நிச்சயம் வீழ்த்துவோம் என்று சபதத்தோடு களத்தில் இப்போதிருந்தே தேர்தல் பணிகளை வெறியோடு ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்காடு தொகுதி சூரியனை சூடிக் கொள்ளுமா, இரட்டை இலையையே மீண்டும் தூக்கிப் பிடிக்குமா? தீர்ப்பு ஏற்காடு தொகுதி மக்கள் கையில்…..