மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தற்போதைய ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்திவிட்டு, பா.ஜ.க. அரசை அமைக்க, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இணைந்து தேர்தல் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இருவரும் மாறி மாறி அந்த மாநிலத்திற்குப் பயணம் செய்து, சூறாவளி பிரசாரம் செய்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் பல்ஸ் ரேட்டை அதிகரிக்கச் செய்கின்றனர்.
இன்றைய தினம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்களாத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
கூச் பீகாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டததில் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை முதல்வர் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் அச்சம் நிறைந்த அரசியல் களத்தை மம்தா ஏற்படுத்தி விட்டதாகவும், மே மாதத்திற்குப் பிறகு மம்தா பானர்ஜி, முதலமைச்சர் எனும் அதிகாரமிக்க பதவியில் இருக்க மாட்டார் என்றும் அமித் ஷா ஆவேசமாக கூறினார்.
மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றிப் பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா நம்பிக்கையுடன் தெரிவித்தார்.