அக்டோபர் 2 கிராம சபை நடத்த அனுமதி வழங்கப்பட்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியம் ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர், கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஊராட்சித் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அக்டோபர் 2 கிராமசபை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்கே உள்ளது என்பதை எடுத்துரைத்தார். தற்போது ஊராட்சிகளின் ஆய்வாளராக உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்பத்தின்படியே கிராமசபை நடப்பது போன்ற சூழலை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு விசாரணைக்கு பிறகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ், தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கிராமசபை நடப்பது போன்ற சூழல் உருவாகி இருப்பதைச் சுட்டிக்காட்டி, அரசின் கருத்தைப் பெறுவதற்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
இதன் மூலம் கொரோனோ தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தடையின்றி நடப்பதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. தமிழக அரசின் முடிவை சமூக ஆர்வலார்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.