Fri. Nov 22nd, 2024

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி, தனது ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் நீட் தேர்வு அமலுக்கு வந்தப் பிறகு கடந்த 4 ஆண்டுகளில் தமிழ் வழியில் பிளஸ் 2 படித்த மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்வது இரட்டை இலக்கத்திற்கு வந்துவிட்டது என்று, ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பாக தமிழ் வழியில் படித்த மாணவர்கள், அதிகபட்சமாக 602 பேர் மருத்துவப் படியில் 2014 15 ஆம் கல்வியாண்டில் சேர்த்துள்ளனர். மொத்தமாக 2010 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை தமிழ் வழியில் மாநில கல்விப் பாட்டத்தில் திட்ட மாணவர்கள் 7 ஆண்டுகளில் ஆண்டுதோறும் மூன்று இலக்க எண்ணிக்கையில், அதாவது 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ் வழியில் படித்த மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்வது என்பது பெரும் போராட்டமாக மாறியதால், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்கு குறைந்துவிட்டதுதான் வேதனைக்குரியாக ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வு அறிமுகமான 2017 18 ஆம் கல்வியாண்டில் வெறும் 56 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளனர். அதற்கடுத்த ஆண்டு, கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் 119 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கடுத்த ஆண்டான 2019 2020 ஆம் ஆண்டில் மீண்டும் இரட்டை இலக்கத்திற்கு சென்று வெறும் 71 பேரின் எம்.பி.பி.எஸ் கனவு மட்டுமே நிறைவேறியுள்ளது.

அதற்கடுத்த ஆண்டு, 2020 21 ஆம் ஆண்டில் 82 பேரும், கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் காரணமாக 217 பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துள்ளனர்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததையடுத்து, தாய் மொழியாம் தமிழில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்ததைப் போல, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவும் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மத்திய கல்வி வாரியத்தின் கீழ் வரும் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வு மூலம் அதிகமான, அதாவது 2 ஆயிரம் எண்ணிக்கை அளவில் மருத்துவப் படிப்பில் சேர்த்து வருகின்றனர்.

நீட் தேர்வு மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் ஆணையம் வழங்கிய அறிக்கை மூலம் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதாக கூறும் கல்வியாளர்கள், நீட் தேர்வு தொடர்ந்தால், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அநீதி ஏற்பட்டுவிடும் என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.