குஜராத் மாநில பாஜக முதல்வராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்தாண்டு குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களை ஈர்க்கும் வலிமை கொண்ட பாஜக தலைவரை முதல்வராக நியமிக்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய பாஜக அமைச்சரும், குஜராத் மாநில பாஜக மேலிட பொறுப்பாளருமான நரேந்திர சிங் தோமர் குஜராத் வந்துள்ளார். அவருடன் பாஜக பொதுச் செயலாளர் தருணும் வந்துள்ளார்.
அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து கருத்து கேட்கப்படும். மேலும், குஜராத் மாநில பாஜக தலைவர் பாடீல் உள்ளிட்ட முன்னணி தலைவர்களுடனும் கலந்து ஆலோசித்து புதிய முதல்வர் யார் என்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று கூறினர். பின்னர் மத்திய அமைச்சரும், தருணும் காந்திநகரில் உள்ள பாஜக தலைவர் பாடீல் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
அவருடன் இருவரும் புதிய முதல்வர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக குஜராத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தின் புதிய முதல்வராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, தற்போதைய குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கசிகிறிது.இருப்பினும், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள்ளாக குஜராத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.