முந்தைய அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தை தலைமையிமாக கொண்டு ஜெயலலிதா பெயரில் பல்கலை., அமைக்கப்பட்டது. அதனை கலைத்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. உடன் இணைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. முறையே அமைச்சர் க.பொன்முடி, அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி ஆகியோர் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தனர்.
உயர்கல்வி மான்ய கோரிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் க.பொன்முடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் மீதான விவாதத்தின் மீது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன், ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக புகார் தெரிவித்திருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது. இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது” என்று அவர் கூறினார்.
அதிமுக வெளிநடப்பு…
இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும், தொடராது என அறிவித்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுகிறது. கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா அவர்கள்.
கல்வியில் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அவரின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறார்கள்”என்று அவர் குற்றம் சாட்டினார்.