கேரளா சென்று அன்றாடம் தோட்ட வேலை செய்து வரும் தேனி மாவட்ட பெண்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டம் ஏற்படுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என பிஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் கூடலூர் நகரத்தில் தமிழச்சி உழவர் உற்பத்தியாளர் விற்பனை குழு துவக்கம் மற்றும் அலுவலக திறப்பு விழா இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பிஆர் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் மகளிர் குழுவினர் அவரிடம் கேரளா சென்று தோட்டத் தொழில் செய்திட அபாயகரமான மலைப்பாதையில் வாகனங்களில் சென்று வருவது பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. எங்களுக்கு உயிருக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு காப்பீடு திட்டம் வேண்டும்.
தொடர்ந்து கேரள அரசு கொரோனாவை காரணங்காட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். அரசு கொடுக்கும் இலவச அரிசியை கொண்டு தான் எங்கள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த பி.ஆர் பாண்டியன் தொழிலாளர் நலவாரியம் மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலைப்பகுதியில் சென்று தோட்டத் தொழிலில் ஈடுபட்டு அன்றாடம் ஆபத்தான சாலைகளில் வாகனங்களில் பயணிப்பதில் ஏற்படும் ஆபத்து குறித்து அரசிடம் எடுத்துரைத்து கேரள மாநிலம் சென்று வரும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் அரசு பாதுகாப்போடு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மதுரை மண்டல கவரவ தலைவர் திருப்புவனம் ஆதிமூலம்,மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண்,தேனி மாவட்ட தலைவர் கூடலூர் செந்தில்குமார், செயலாளர் பூபாலன், தஞ்சை மாநகர தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பெண்கள் பங்கேற்றனர்.
முன்னதாக மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.