மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த 10 மாவட்டங்களில் ஹெக்டருக்கு ரூ.2000 என பாதிப்பு ஏற்பட்டுள்ள மொத்த நிலங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.182 கோடி உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், கன்னியாகுமரியில் பயிரிடப்படும் மத்தி வாழைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
இதனிடையே கேள்வி நேரத்தின் போது பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க செயல் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், நந்தனத்தில் உள்ள நிதித்துறை வளாகத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக பணியாற்றிய பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்றும் பெட்ரோல் மீதான வரி குறைப்பினால் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். .