Sun. Nov 24th, 2024

நட்டத்தை கணக்கு காட்டி விமான போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை…

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற நாள் முதல் இன்றைய தினம் வரை, மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறார். அபரிதமான லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வெகுவேகமாக தாரை வார்த்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், டில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் எல்லாம் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன இதேபோல, மேலும் 13 முக்கிய நகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் மத்திய விமானத்துறை அமைச்சரகம் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமருக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபரான அதானிதான், வரும் நாட்களில் மத்திய அரசிடம் இருந்து விமான நிலையங்களை விலைக்கு வாங்கும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார் என்று விமான போக்குவரத்துத் துறையில் அனுபவமிக்க அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தனைக்கும் கடந்த ஆண்டு மார்ச் முதல் இன்றைய தேதி வரை, கொரோனோ பேரிடரை சமாளிக்க விமானப் போக்குவரத்து துறைதான் முக்கிய பங்காற்றியிருப்பதை நினைவுக்கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விமான நிலையங்கள், கடந்த இரண்டு ஆண்டு கொரோனோ காலத்தில் கடுமையாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட போதும், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் நட்டத்தை எதிர்கொண்டுள்ள போதும், பேரிடர் கால சேவையாற்றுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆக்சிஜன், மருத்துப் பொருட்கள், தடுப்பூசிகள் என கொரோனோ பேரிடர் காலத்தில், இந்திய மக்களின் உயிர்களை மட்டுமல்ல, உலகின் பலநாடுகளில் உள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கும் 24 மணிநேரமும் இடைவிடாது செயல்பட்டுள்ளன.


குறிப்பாக, இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில், விமானத்துறையின் உயர் அலுவலர்கள், வீடுகளில் இருந்து பணியாற்றி வந்த காலங்களில், விமான நிலைய அலுவலக பணியாளர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து துறை பணியாளர்கள் (கார்க்கோ) ஆகியோர், கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் இறுதி முதல் இப்போது வரை தொடர்ந்து நாள்தோறும் விமான நிலையங்களுக்குச் சென்று ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உள்ளிட்டவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பும் பணியில் 24 மணிநேரமும் பணியாற்றியுள்ளார்கள்.
தஙகள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொரோனோ பேரிடர் காலத்தில் பணியாற்றிய விமான நிலைய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு வெகுமதிகளை வழங்கி கௌரவிக்க வேண்டிய மத்திய அரசு, அவர்களது வயிற்றில் அடிக்கும் கொடூரத்தை செய்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நட்டத்தை காரணம் காட்டி, மாத ஊதியத்தில் 10 சதவீதத்திற்கு மேலாக சம்பளம் பிடித்தம் செய்ய, இந்திய விமான போக்குவரத்துத் துறை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கடை நிலை ஊழியர் முதல், விமானத்துறையின் உயரதிகாரி வரை அவரவர் பெறும் சம்பளத்திற்கு ஏற்ப 10 ஆயிரம் முதல் கூடுதலாக பல ஆயிரங்கள் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
சம்பளம் பிடித்தம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானவுடன் அதிர்ச்சியடைந்துள்ள விமானத்துறை ஊழியர்கள், கொரோனோ பேரிடரை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பமும் கடுமையாக போராடி வரும் இந்த நேரத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமே, சம்பளம் பிடித்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல ஆயிரம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டி தந்தது விமான போக்குவரத்து துறை என்றும் அபரிதமான லாபத்தை ஈட்டிய போதெல்லாம், லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் மத்திய அரசின் பங்களிப்பாக இந்திய விமான போக்குவரத்து துறை வழங்கியுள்ளது என்றும் வேதனையோடு கூறினார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி பல மாதங்கள் அலுவலகத்திற்கே வராத மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு எல்லாம் இரண்டு அரசுகள், மாத ஊதியத்தை பிடித்தம் செய்யாமல்தானே வழங்கின. அதுபோலவே, முழுமையாக முடக்கப்பட்ட ரயில்வே துறையும் கூட, அதன் ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை பிடித்தம் இல்லாமல்தானே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில், விமான நிலையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மட்டும் செய்த பாவம் என்ன? என்று கண்ணீர் ததும்ப கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்களின் கேள்விகளிலும் நியாயம் இருக்கிறது என்று கூறும் பாஜக மூத்த தலைவர் ஒருவர், குழந்தைகள் உயர்க்கல்வி, வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் மூலம்தான் விமானத்துறை ஊழியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் திடீரென்று மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்தால், அவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆதங்கத்தோடு தெரிவித்தார். விமான நிலையங்களின் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து அனைத்துக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்பது தொழிற்சங்க வாதிகளின் குரலாக இருக்கிறது.