கர்நாடக ஆளும் பாஜக அரசில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலவி வந்த குழப்பத்திற்கு இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக மேலிடத்தின் அறிவுரையை ஏற்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா பதவி விலகினார். இதனையடுத்து, அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த 61 வயதான பசவராஜ் பொம்மை, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள அவருக்கு எடியூரப்பா பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பசவராஜ் பொம்மை, தனது தலைமையில் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.
இதனையடுத்து, புதிய ஆட்சி அமைக்க வருமாறு பொம்மைக்கு கர்நாடக ஆளுநர் கெலாட் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள பொம்மை, நாளை காலை (ஜூலை 27) 11 மணியளவில் முதல் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று பெங்களூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.