Sat. Nov 23rd, 2024

சேலம், ஈரோடு, வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுக.வுக்கு ஆள் பிடிக்கும் வேலையை ஒட்டுமொத்தமாக கான்ட்ராக்ட் எடுத்திருப்பவர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமே. கொரோனோ பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சேலம் மாவட்ட கண்காணிப்பாளராக அமைச்சரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்திருக்கிறார். அந்த பொறுப்போடு, அதிமுக.விலும் அமமுக.விலும் அவர் இருந்த காலத்தில் அறிமுகமானவர்களை எல்லாம் திமுக.வுக்கு இழுத்து வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மேலும் நல்ல பெயரை பெற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் ஒருசேர மேற்கொண்ட நேரத்தில் அவருடன் இணைந்து செயல்பட்டதால் என்னவோ, அவரின் சகவாசம், சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரிடம் ஒட்டிக் கொண்டது போல.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டஃப் பைட் கொடுக்கும் வகையில், இருவரும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை வலை வீசி தேடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீசும் வலையில், சமூக விரோதிகள், ரவுடிகள் என யார் சிக்கினாலும் கூட அவர்களின் சமூக விரோதச் செயல்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் கொத்தாக தூக்கிக் கொண்டு சென்னைக்கு அழைத்து வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக.வில் சேர்க்கும் பணியை முழுவீச்சில் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி சிக்கியவர்தான் சேலம் கிழக்கு மாவட்ட அமமுக ஜெயலலிதா பேரவைச் தலைவர் எம்.காட்டுராஜா (எ) பழனிசாமி என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் சேர்ந்துள்ளார். இந்த நல்ல காரியத்தை செய்தவர், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம். காட்டுராஜாவின் ஜாதகத்தை புரட்டி பார்த்தால், அண்ணா அறிவாலயத்தில் கால் வைக்க கூட தகுதியில்லாதவர் அவர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக அப்போதைய ஆட்சிக்காலத்திலேயே திமுக.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டவர் காட்டுராஜா.
திமுக.வில் இருந்து நீக்கப்பட்டவர், அதிமுக.வில் சேர்ந்தார். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர், எடப்பாடி பழனிசாமியின் நிழலாக இருக்கும் தற்போதைய கூட்டுறவு வங்கி சேர்மன் சேலம் இளங்கோவன்.

அதிமுக ஆட்சியிலும் அவரது கட்டப்பஞ்சாயத்துகள் தொடர்ந்து கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டநேரத்தில், அவரை அதிமுக.வில் இருந்து நீக்கும் சூழ்நிலை உருவானது. உடனடியாக அமமுக.வுக்கு தாவினார். அதிமுக.வுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கை குறைகிறதே என்ற கணக்கில் அவரை வரவேற்று, ஜெயலலிதா பெயரிலான பேரவைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.


இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அமமுக.வில் குப்பை கொட்டியவரைதான், பொன்னாடை போர்த்தி திமுக.வுக்கு வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுக.வில் ஐக்கியமாக வைத்து புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார், எஸ்.ஆர்.சிவலிங்கம். பெயருக்கு ஏற்ப பொதுமக்களிடம் எகிறி குதிக்கும் காட்டுராஜா என்கிற பழனிசாமிக்கு நல்ல காலம் பொறந்திருக்கிறதோ இல்லை சேலம் கிழக்கு மாவட்ட திமுக.வுக்கு நல்ல காலம் பொறந்திருக்கிறதோ என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சேலம் திமுக முன்னணி நிர்வாகிகள்.

காட்டுராஜா, திமுக.வில் சேர்ந்தது குறித்து திமுக.வின் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அமமுக அம்மா பேரவைச் செயலாளர் என்றே அச்சடிக்கப்பட்டுள்ளது அதிமுக.விலும் அமமுக.விலும்தான் ஜெயலலிதா பேரவை என்பதை அம்மா பேரவை என்று பயபக்தியோடு சொல்வார்கள். அந்தளவுக்கான பக்தி, திமுக தலைமைக்கழகத்திலும் தொற்றிக் கொண்டு விட்டதோ, தெரியவில்லை. அவர்களும் அம்மா பேரவை என்றே திமுக.வின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னத்த சொல்ல….

எஸ்.ஆர்.சிவலிங்கம் ஒருபுறம் ஆள் பிடிக்க, தன் பங்கிற்கும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ஆ.ராஜேந்தின் எம்.எல்.ஏ.வும், அதிமுக.வில் இருந்து ஒன்றிய கவுன்சிலரையே தூக்கிக் கொண்டு சென்னை பறந்துள்ளார். திருமலைகிரி ஊராட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வள்ளி முருகன், சேலம் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். அதிமுக ஒன்றியத் தலைவர் மல்லிகா வையாபுரிக்கும் இவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுக.வில் சேர முடிவெடுத்துள்ளார். அவரை லபக் என்று கொத்திக் கொண்ட ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக. தம்பதியினரை உறுப்பினர்களாக்கி புளாங்கிதம் அடைந்து கொண்டார்.
ஆளும்கட்சியான திமுக.வில் உறுப்பினராக சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று யாரும் மண்டையை பியத்துக் கொள்ள தேவையில்லை. சிறப்பு தகுதிகள் ஏதும் வேண்டாம். காட்டுராஜாவுக்கு இருக்கிற தகுதிகள் போல, யாருக்காவது இருந்தால், அவர்களை பயப்படாமல், அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களுக்கு பரிந்துரைக்கலாம். திமுக செயலாளர்கள் அழைத்து வருகிறவர்களின் பின்புலம் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளவதற்கு எல்லாம் இப்போதைக்கு நேரம் இல்லை. யார் வந்தாலும் வரவேற்க, அண்ணா அறிவாலயத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன….