Thu. Dec 5th, 2024

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் பொது செயலாளர் அருள்பணி சர்ச்சில் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தை நேரில் சந்தித்து  தேசிய கடல் மீன்வள வரைவு 2021 ஐ கைவிட தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவின் விவரம் இதோ…

மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன் பிடித் தொழிலுக்கு இச்சட்ட முன்வரைவு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது.
இந்தியாவில் மீன் பிடித்தல் மற்றும் மீன் வளர்த்தல் தொழிலில் 16 மில்லியன் மீனவர்கள் நேரிடையாக மற்றும் இதன் இரண்டு மடங்கு மக்கள் மீன் சார்ந்த தொழிலும் ஈடுபட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு அறுபதாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இது 5% மும், விவசாய ஏற்றுமதியில் 19% ஆகும். கடல் மீன் ஏற்றுமதியில் 75% விசைப்படகு மூலமும், 23% நாட்டு படகு மூலமும், 2% கட்டுமரம் மூலமும் மீன்பிடிப்பு வழி நடக்கிறது.

இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து, நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என்று குறிக்கப்படுகிறது.

பிராந்திய நீர், கண்ட திட்டு, சிறப்பு பொருளாதார கடல், பிற கடல் மண்டலம் சட்டம் 1976 சரத் 7 பிரிவு 5 இந்திய மீனவர்கள் சிறப்பு பொருளாதார கடல் அதாவது 200 கடல் மைல் வரை மீன்பிடிக்க அரசிடமிருந்து அனுமதி பெற தேவை இல்லை என கூறுகிறது, ஆனால், தற்போதய மசோதா  பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக் கூடாது. கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். மீன் பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும் என கூறுகிறது.

டாக்டர் அய்யப்பன் கமிட்டி அறிக்கை 2015 இந்திய கடல் பகுதியில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்க கூடாது, மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க இந்திய பாரம்பரிய மீனவர்களுக்கு பயிற்சியும், பொருளாதார உதவியும் அரசு செய்யவேண்டும் என கூறியுள்ளது, ஆனால் புது மசோதா 12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உள்ளூர்  பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.

வெளிப் பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, “வணிகக் கப்பல் சட்டம் 1958” இன் கீழ் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே மீன் பிடி உரிமங்கள் கொடுக்கப்படும்.இதன்படி பதிவு செய்ய வேண்டுமானால் கப்பலில் வேலை செய்யும் மாலுமி கட்டுமரத்திலும் கூட இருக்க வேண்டும். கட்டுமரம், படகு இயக்க ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும்.

இவை எதுவுமே பாரம்பரிய மீன்பிடிக் கட்டுமரங்களில் இருந்ததும் இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால் புதிய சட்ட முன்வரைவில் இடம்பெற்று இருக்கின்றன.

பாரம்பரிய மீனவர்கள் மீன் வரும் திசையை பார்தும், மீன் இனம் அறிந்தும் அதற்கு ஏற்ற வலை, தூண்டில் ஆகியவற்றை பயன்படுத்தி கிடைக்கின்ற மீனை வேட்டையாடி வருவர். தற்போதய வரைவு: எப்போது மீன்பிடிக்க போவேன், எந்த வகை மீனை பிடிப்பேன், எத்தனை கிலோ மீன் பிடிப்பது, எந்த கடல் பகுதியில் மீன் பிடிப்பது, எந்த வகையான வலை மற்றும் தூண்டிலை மீன் பிடிக்க பயன்படுத்துவேன் என்று ஒவ்வரு முறையும் மத்திய அரசு அதிகாரியிடம் இருந்து எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும்.

மீன் வளத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்ய இந்த முன்வரைவு அதிகாரம் அளிக்கிறது. இந்திய கடலோர காவல் படைக்கு மீனவர்கள் மீது எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனுமதிக்கு மாராகவோ/ கூடுதலாகவோ மீன் பிடிக்க பட்டிருந்தால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கவும், ஐயாயிரம் ரூபாய் முதல்  5 இலட்சம் ரூபாய் வரை  அபராதம் விதிக்கவும் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய கடல் எல்லைக்குள் சட்டத்தை மீறி பன்னாட்டு கப்பல்கள் பதிவு செய்யாமல் கட்டுப்பாடற்ற முறையில் மீன் வளத்தை கொள்ளை அடிப்பதை இச்சட்டம் தடை செய்யும். மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் பதிவுவழங்கப்படும் என்றெல்லாம் கூறி கடல் மீன் வளச் சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது.


இந்தியாவின் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய  ஒன்பது கடோலற மாநிலங்களிலும்; புதுச்சேரி, தமாம் – தியு ஆகிய இரண்டு கடலோர  யூனியன் பிரதேசங்களிலும்; அந்தமான் நிகோபார், லாக்சதீவ் ஆகிய இரண்டு தீவு யூனியன் பிரதேசங்களில் உள்ள 66 மாவட்டங்களில் 3288 கடலோர கிராமங்களில் வசிக்கும் 8,64,550 குடும்பங்களில் உள்ள நான்கு மில்லியன் மீனவர்கள் நேரிடையாக பாதிக்கப்படுவர். மீன்வள துறையில் பதிவு செய்யப்பட்ட மீனவர்களது 1,94,490 விசைப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டு படகுகள், கட்டுமரங்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல இயலாத நிலையை ஏற்படுத்தும், இதனால், ஆண்டுக்கு 38,20,207 ஆயிரம் கிலோ மீன்பிடிப்பு பாதிக்கப்படும். இந்நிலை நீடித்தால் மீன்  ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ள தனது இடத்தை இந்தியா இழக்க நேரிடும்.

பெரும் முதலாளிகள் அதிக முதலீடு செய்வதற்கும், கடலில் மீன் வளர்துவதற்கும், மீன் ஏற்றுமதியை மட்டுமே ஆதரிக்கும் இச் சட்ட வரைவு பாரம்பரிய மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் தங்கள் கடலில் தாங்களே மீன்பிடிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.

 மீன் வளர்ப்பதற்கும், மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும், எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கும் ஆலைகளுக்கும் கடல் பகுதிகளை குத்தகைக்கு வழங்கும்போது அது பாரம்பரிய மீனவர்களை பாதிப்பதோடு கடல் மீது மீனவர்களுக்கு இருக்கும் உரிமையும் இழந்து அக்கடலிலே பெரும் முதலாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் நிலைக்கு ஆளாவுவர். 

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றிய அரசு உண்மையிலேயே நமது கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீனவர்கள் நலனுக்காகவும் சட்டம் இயற்றக் கருதினால் கடலோர மாநில அரசுகள் மற்றும் மீனவர் நலச் சங்கங்கள், மீனவ மக்கள் பிரதிநிதிகள் குழுவை அமைத்து, கருத்துகளைப் பெற்று சட்ட முன்வரைவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் வழங்கியுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.