Sun. Nov 24th, 2024

திமுக தலைமையின் எச்சரிக்கை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னணி பொறுப்பாளர்களுடன் மோதும் அமைச்சர் பொன்முடியால் புதிய தலைவலி உருவாகியுள்ளதாக கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.

அவருடன் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ வுமான நா.புகழேந்தியும் பங்கேற்றார்.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க எம்எல்ஏக்களான, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான, வசந்தம் க. கர்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியன் ,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J. மணிக்கண்ணன் ஆகியோர், திமு தலைமையின் உத்திரவின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை….

அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என வலியுறுத்தி இருவாரங்களுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளர்கள் இருவரும் தி.மு.க தலைமைக்கு புகார் அளித்ததன் பேரில் தலைமை அதிரடி விசாரனை மேற்கொண்டது.

அதன் முடிவில், அமைச்சர் பொன்முடியின் PA எனக் கூறிக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட்டு வந்த M.S பாபு என்பவரை திமுக. வை விட்டு நீக்கி, அமைச்சருக்கு திமுக தலைமை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது..

மேலும், அமைச்சர் பொன்முடிக்கும் தி.மு.க தலைமை கடிவாளம் போட்டது. விழுப்புரம் மாவட்ட எல்லையை தாண்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலையிட்டு கோஷ்டி அரசியல் செய்யக் கூடாது எனவும் கள்ளக்குறிச்சிக்கு நீங்கள் மாவட்ட அமைச்சர் அல்ல அங்குள்ள மாவட்ட செயலாளர்கள் அந்த மாவட்டத்தை பார்த்துக்கொள்வார்கள் எனவும் எச்சரிக்கை யாக அறிவுறுத்தப்பட்டது..

இருப்பினும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மீதான காதலை அமைச்சர் பொன்முடியால் விட முடியவில்லை..

அவரைப் போலவே அவரது உதவியாளர் என்று கூறிக்கொள்ளும் எம். எஸ். பாபுவும் திமுக தலைமையின் உத்தரவை பொருட்படுத்தாமல் வீம்பாக அமைச்சர் பொன்முடி கள்ளக்குறிச்சியில் சுற்றுப்பயணம் செய்யும்போதும் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் போது கூடவே ஒட்டிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்..

எம். எஸ். பாபுவின் அலப்பறைகளால் ஆத்திரம் அடைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திமுக முன்னணி நிர்வாகிகள் திமுக தலைமைக்கு மீண்டும் புகார் மனுக்களை தட்டி விட்டு வருகின்றனர்..

திமுக தலைமையின் உத்தரவை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வரும் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோருக்கு எதிராக முதல்வர் மு. க. ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா ? என கள்ளக்குறிச்சி மாவட்ட விஐபிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்…