கொரோனோ பெருந்தொற்று பரவிய கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து இன்றைய தேதி வரை பொதுமக்கள் ஊரடங்கு எனும் இரண்டு அரசுகளின் உத்தரவால், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். பொதுமக்களின் துயரங்களை கண்டுக்கொள்ளாமல் சர்வதிகாரப் போக்கில் அதிமுக அரசு செயல்பட்டதால்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை தூக்கியெறிந்துவிட்டு, திமுக.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாவது தங்கள் துயரை துடைக்குமா என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்த போது, கொரோனோ நிவாரண நிதியாக ரூபாய் 4,000 த்தை வழங்கி, பொதுமக்கள் வயிற்றில் அரைகுறையாக பால் வார்த்து புண்ணியம் தேடிக்கொண்டது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் உள்ள அமைச்சர்கள், கொரோனோ துயரத்தைப் பற்றி துளியும் பொருட்படுத்தாமல், அரசு விழாக்களிலும், ஆய்வுக் கூட்டங்களிலும் ஆடம்பரமாகதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரவலான குற்றச்சாட்டு எழத் துவங்கிவிட்டதுதான் துயரம்..
அந்த வகையில், சேலத்திற்கு நேற்று முன்தினம் ஆய்வுக்காக வந்த இரண்டு அமைச்சர்கள், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஆகிய இருவரும், அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்காமல், 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர ஹோட்டலில் தங்கியது, அங்குள்ள சமூக ஆர்வலர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இத்தனைக்கும், ஜூலை 5 முதல்தான் ஹோட்டல்கள் செயல்படவே, தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. சேலம் முதல் நீலகிரி வரை ஊரடங்கு தளர்வு இல்லாமல்தான் நேற்று வரை இருந்து வந்தது. அரசு விதியை புறக்கணித்து, இரண்டு அமைச்சர்களும், தனியார் ஹோட்டலில் தங்கியது, அரசு விதிகளுக்கு முரணானது என்று கூறும் சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்துள்ளனர்.
தனியார் ஹோட்டலில் அமைச்சர்கள் தங்கும்போது, அந்த ஹோட்டலில் எதிர்காலத்தில் ஏதாவது குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தால், ஆட்சியாளர்களின் நெருக்கத்தின் காரணமாக, அப்படிபட்ட நிகழ்வுகளை சட்டத்திற்கே வராமல் தடுத்து விட முடியும் என்று அச்சம் தெரிவிக்கும் திமுக முன்னணி நிர்வாகிகள், தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த காலங்களில் எல்லாம், சேலத்தில் அவருக்கு சொந்தமாக பங்களா இருந்தாலும் கூட அரசு தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்கிற நாட்களில், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில்தான் பெரும்பாலும் தங்கியுள்ளார் என்கிறார்கள்.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும், சின்ன சின்ன பழுதுகள் ஏற்பட்டால் கூட, அதனை உடனடியாக சரிபார்த்து, தனியார் ஹோட்டலுக்கு இணையாகவே விருந்தினர் மாளிகையை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொகுசு மாளிகையாக்கி வைத்திருப்பதாக கூறும் உள்ளூர் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் கீதா ஜீவன், ஆவடி சா.மு.நாசர் ஆகிய இருவரோடு ஒப்பிடும் போது சேலம் மாவட்டத்திற்கு கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி 100 மடங்கு மேல் என்கிறார்கள் அவர்கள்.
சேலத்திற்கு ஆய்வுக்காக அவர் வரும் போதெல்லாம், காலை முதல் நள்ளிரவு வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றி வந்தாலும் கூட இரவு நேரத்தில் அவரது சொந்த மாவட்டமான கரூருக்கு புறப்பட்டுச் சென்றுவிடுவார்.
ஒருநாள் கூட அவர் சேலத்தில் உள்ள எந்தவொரு நட்சத்திர ஹோட்டலிலும் தங்கியது கிடையாது. இதைவிட சிறப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்குப்பட்ட ரேஷன் கார்டு வைத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார். ஆனால், அதற்காக அவர் சொந்தம் கொண்டாவோ, விளம்பரப்படுத்திக் கொள்ளவோ செய்யவில்லை. சேலத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எளிமையாக நடந்து கொண்டு, பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், ஆய்வுக் கூட்டத்திற்காக சேலம் வந்த அமைச்சர்கள் கீதா ஜீவனும், ஆவடி நாசரும் பொதுமக்களின் வெறுப்பை ஒட்டுமொத்தமாக சம்பாதித்துள்ளனர்.
அமைச்சர்கள் இருவரும் தங்கிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு சூட் எனப்படும் சொகுசு அறையின் வாடகை 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும். அமைசசருடன் தங்கிய உதவியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான அறை வாடகை, உணவுச் செலவு ஆகியவற்றை கணக்கிட்டால், குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஹோட்டலுக்காக செலவழிக்கப்பட்டிருக்கும்.இரண்டு அமைச்சர்களுக்கான செலவை எப்படி கணக்கிட்டு பார்த்தாலும் ஒரு லட்சம் ரூபாயை எட்டியிருக்கும்.
அமைச்சர்கள் இரண்டு பேரும் தங்கிய செலவுத் தொகையை, சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஆ.ராஜேந்திரன், தனது சொந்தப் பணத்தில் இருந்து செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களை சந்தோஷப்படுத்தி அனுப்புவதில் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மெனக்கெட்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.
அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஆ.ராஜேந்திரன். சேலம் வரும் அமைச்சர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பினால், அவரவர் செல்வாக்கிற்கு தகுந்தவாறு, தனது பெயரை அமைச்சர் பதவிக்காக சிபாரிசு செய்வார்கள் என்ற நப்பாசையில்தான் செலவழிக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள், அவரது நலம் விரும்பிகள்.
திமுக எம்.எல்.ஏ., பணமோ, அமைச்சர்களின் சொந்த செலவோ அல்லது அரசாங்க செலவோ, கொரோனோ கொடுமையில் மக்கள் வாடி வதங்கி போயிருக்கும் இந்த நேரத்தில், ஆடம்ரபத்தை தவிர்த்து, எளிமையான அரசுப் பணியை அமைச்சர்கள் மேற்கொண்டால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்துள்ள நல்ல பெயர் ஐந்தாண்டு காலமும் தொடரும் என்ற ஆதங்கம்தான் தங்களுக்கு இருக்கிறது என்கிறார்கள் சேலம் நகர திமுக நிர்வாகிகள்.
மேலும், இரண்டு அமைச்சர்களின் ஆடம்பரத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செலவு செய்ததைப் போல, ஏழைக்குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்திருந்தால், 200 குடும்பங்கள் சந்தோஷப்பட்டிருக்கும். திமுக ஆட்சியையையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வாயார வாழ்த்தியிருப்பார்கள் என்கிறார்கள் சேலம் நகர திமுக முன்னோடிகள்.
நிறைவாக அவர்கள் கூறியது, சேலம் மண்ணின் மைந்தராக இருக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்., அரசுப் பணம் ஒத்த ரூபாய் கூட வீணாக செலவழிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, ஆய்வுப் பயணத்திற்காக தான் மாவட்டங்களுக்கு வரும் போது சைவ உணவுகள் மட்டுமே வாங்க வேண்டும், உணவு ஏற்பாடு செய்வதற்காக ஆடம்பரமாக செலவழித்து விடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்.
அரசின் நிதி நிலையை கருத்திக் கொண்டும், ஆடம்பரத்தை தவிர்க்கும் பொருட்டும், அனாவசிய செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம், ஐஏஎஸ் அதிகாரியான, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸுக்கே இருக்கும்போது, ஆட்சிக்கு வந்த 60 நாட்களிலேயே அமைச்சர்கள் ஆடம்பரமாகவும், பகட்டாகவும் சுற்றி வந்தால், மக்களின் வெறுப்பை வெகு விரைவாக சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று மிகுந்த வருத்தத்தோடு பேசுகிறார்கள் சேலம் நகர திமுக முன்னணி நிர்வாகிகள்…