நியூஸ் ஜெ டிவி மற்றும் நமது அம்மா நாளிதழை நல்லரசு விட்டாலும், அந்த இரண்டு நிறுவனங்களும் நல்லரசுவை விடாது போல..
நமது அம்மா நாளிதழின் பிறப்பு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றவுடன்தான் வெளிவந்தது. அவரது அமைச்சரவையில் சகலகலா வல்லவராக இருந்த அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நேரடி நிதியுதவியில் நமது அம்மா நாளிதழ் வெளிவந்தது. அவரின் பினாமியாக செயல்பட்ட அவரது உறவினர் சந்திரசேகரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செய்யப்பட துவங்கிய அந்த நிறுவனம், சந்திரசேகருக்கு சொந்தமான ஆழ்வார்ப்பேட்டை மாளிகையில் ஆர்ப்பாட்டமாக செயல்பட்டு வந்தது.
இரண்டு, மூன்று அடுக்கு கொண்ட அந்த மாளிகையில், அலங்காரங்கள் தூள் கிளப்பின. அதிமுக ஆட்சியில் இருந்த வரை வாரி வாரி செலவுகளுக்கு கோடி கோடியாய் பணம் வழங்கி வந்தார் சந்திரசேகர். இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் தண்ணீராக பணம் செலவழிக்கப்பட்ட போதும், அந்த நாளிதழ் மூலம் வந்த விற்பனை வருமானத்தை, ஆட்சியில் இருந்த காலத்தில் ஒரு பொருட்டாகவே மதித்தது இல்லையாம் சந்திரசேகர்.
ஆனால், அதிமுக ஆட்சி பறிப்போய் இரண்டு மாதங்கள் முடிவடைந்திருக்கிற இந்த நேரத்தில், மாதச் செலவுகளுக்கான பணத்தைக் கூட கண்ணில் காட்ட மறுக்கிறார் சந்திரசேகர். அதனால், நமது அம்மா நாளிதழ், நிதி நெருக்கடியால் திணற ஆரம்பித்துவிட்டது. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நமது அம்மா நாளிதழுக்கு பணம் கொட்டி அழுவதை நிறுத்திக் கொண்டார் என்று கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் தன்னை தேடி வந்த ஊடகவியலாளர்களுக்கு எல்லாம் வாரி வாரி வழங்கி வள்ளலாக காட்சி தந்த எஸ்.பி. வேலுமணி, இப்போது கஞ்சப் பேர்வழியாக மாறி, தனது நிர்வாகத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்குக் கூட விட்டாராம்.
அதனால், தற்போது நமது அம்மா நாளிதழில் பணிபுரியும் 75 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்களுக்கு சம்பளமே வழங்குவதே இல்லையாம். எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற கதையாக, சும்மா பொழுதுபோக்கிற்காக நமது அம்மா நாளிதழ்களுக்கு வந்துச் சென்ற பல பேர், சம்பளம் முறையாக வழங்காததால் கடந்த பல நாட்களாக வேலைக்கே வருவது இல்லையாம். வேறு வழியில்லாமல் வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அப்பாவி ஊடகவியலாளர்கள் ஒன்றிரண்டு பேரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் வகையில் வேலை பளு அதிகமாக நொந்து போய் அலுவலகத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில், நமது அம்மா நாளிதழுக்காக இதுவரை ஒத்த பைசா செலவழிக்காத அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை, உலகத்திலேயே இல்லாத தலைவர் ரேஞ்சுக்கு தூக்கி பிடித்து கொண்டாடும் வகையில், தலைப்புச் செய்தியில் இருந்து பக்கத்திற்கு பக்கம் அவருக்கே முக்கியத்துவம் கொடுத்து தன் சாதிப்பாசத்தை பட்டுவர்த்தனமாக காட்டிக் கொண்டிருக்கிறாராம் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர்.
அவரின் தில்லாலங்கடி வேலைகளால் நொந்துப் போன, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு, நமது அம்மா நாளிதழை ஸ்டார் ஹோட்டல் பிரியாணியில் இருந்து தெருவோர கடை பிரியாணி லெவலுக்கு மாற்றும்படி உத்தரவிட்டிருக்கிறாராம். அதனால், முதற்கட்டமாக தனது சொந்த மாளிகையில் செயல்பட்டு வரும் நமது அம்மா நாளிதழ் நிர்வாக அலுவலகத்தை, குறைந்த வாடகை கட்டடத்திற்கு விரைவாக மாற்றும்படி கறாராக தனது சிஷ்ய கோஷ்டிகளுக்கு சொல்லியிருக்கிறார் சந்திரசேகர்.
ஆட்சிப் போய் இரண்டு மாதம்தான் ஆகியிருக்கு. அதற்குள்ள, அலுவலகத்தை மாற்ற ஆரம்பிச்சிட்டாங்க.. அடுத்தடுத்த மாதங்களில், எத்தனைப் பேரை வேலைக்கு வச்சிருப்பாங்க.. யார் யாருக்கு சம்பளம் கொடுப்பாங்கன்னு, வயிற்றில ஈரத்துணியைக் கட்டிக்கிட்டு, பாழாய் போன இந்த கொரோனா காலத்தில நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், நமது அம்மா நாளிதழ் ஊடகவியலாளர்கள்.
நமது அம்மா நாளிதழின் லட்சணம் இப்படியிருக்க, நியூஸ் ஜெ., டிவி நிர்வாகமும் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி விட்டது.
அண்மையில் அதிமுக இரட்டையர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ், ஆகியோர் மாஜிக்கள் புடை சூழ, நியூஸ் ஜெ. டிவி அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டது நல்லரசு வாசர்களுக்கு நினைவில் இருக்கும்.
அப்போது, அதிக சம்பளத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி விட்டு, 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஆட்களை நியமித்து வேலை வாங்குங்கள். செய்தி சேகரிக்க, காரில் எல்லாம் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம். இருசக்கர வாகனத்தில் அனுப்பி வையுங்கள். ஒரு செய்தி எடுக்க, கேமிராமேன், செய்தியாளர் என்ற இரண்டு பேர் தேவையில்லை. கேமிராமேனே போதும் செய்தி, பேட்டி எடுத்து வருவதற்கு என்று சீப் அன்ட் பெஸ்ட் அட்வைஸை வாரி வழங்கினாராம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நெம்பர் 1 தொலைக்காட்சியின் முதலாளி.
எடப்பாடி பழனிசாமி உள்பட கொங்கு மண்டல மாஜி அதிமுக அமைச்சர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த டிவி முதலாளி சொன்னதை வேதவாக்காக கொண்டு, நியூஸ் ஜெ டிவி நிர்வாகம் செயல்பட துவங்கிவிட்டதாம். குறைந்த சம்பளத்திற்கு ஊடகவியலாளர்களை நியமித்து, பத்து மணிநேரம், 12 மணிநேரம் வேலை வாங்குங்கள் என்று நியூஸ் ஜெ., டிவி நிர்வாகத்திற்கு அட்வைஸ் செய்துவிட்டு சென்றாராம் இ.பி.எஸ்., உள்ளிட்ட மாஜி மந்திரிகள்.
முன்னாள் ஆட்சியாளர்கள், இப்பவே இப்படி கஞ்சத்தனம் செய்கிறார்களே, இன்னும் ஐந்தாண்டு காலத்திற்கு இவர்களின் அன்னக்காவடித்தனம் என்னவெல்லாம் செய்யுமோ என்று கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள் நியூஸ் ஜெ டிவி மற்றும் நமது அம்மா நாளிதழில் வேலைப் பார்க்கும் ஊடகவியலாளர்கள்.