Sun. Nov 24th, 2024

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் நலிவுற்ற நாடக கலைஞர்களைச் சந்தித்தார். அப்போது, கொரோனோ காலத்தில் வருமானம் இன்றி தவித்து வருவதாக தெரிவித்தார்கள். இதனையடுத்து, அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நாடக கலைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்வையொட்டி, அவரது வீட்டிற்கு சேலத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர். நாடக கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும் போதே, அதிமுக நிர்வாகிகளிடையே ஒருவிதமான பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிரண்டு நிர்வாகிகள் அங்கிருந்து அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து மூன்று தெருவை நோக்கி விரைந்து சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் சேலம் நெடுஞ்சாலை இல்லம்…

அந்த தெருவில் ஸ்டார் டென் என்ற உள்ளூர் கேபிள் டிவி நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் நுழைவு கதவை உள்பக்கமாக பூட்டி வைத்து, வீட்டிற்குள் அரசு அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். பாதுகாப்பிற்காக நுழைவுப் பகுதியில் காவல்துறையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அரசு அதிகாரிகள் எதற்காக சோதனை நடத்துகிறார்கள் என்று தெரியாததால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியோடு காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி மீண்டும் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று, அங்கு தங்கியிருந்த அவரிடம் கலந்து ஆலோசித்தனர்.

ஒரு சில மணிநேரத்திற்கு மேலாக இந்த பரபரப்பு நீடித்து வந்ததால், அந்த பகுதி பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க, அதிமுக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கையை தொடங்கிவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்த தொடங்கிவிட்டார்கள் என்று புலம்ப தொடங்கிவிட்டார்கள்.

இந்த சோதனை தகவல் தீயாக அதிமுக நிர்வாகிகளிடம் பரவ, ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வரத் தொடங்கினார். நண்பகலில்தான் சோதனைக்கான காரணம் தெரியவந்தது.

எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ், உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கேபிள் டிவி நடத்துவதற்கு உரிய உரிமம் பெறாமல் நடத்தி வந்ததால், வருவாய் துறை அலுவலர்கள், அந்த நிறுவனத்தில் ஆய்வு நடத்தியுள்ளார்கள் என்பது தாமதமாகதான் தெரியவந்தது.

அதிமுக ஆட்சி இருக்கும் வரை, எந்தவிதமான உரிமமும் பெறாமல் ஸ்டார் டென் என்ற பெயரில் உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர். அப்போதே அதுகுறித்து திமுக தரப்பில் மாவட்ட வருவாய் துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உறவினர் என்பதால், அரசு அதிகாரிகள் பயந்து கொண்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஆட்சி மாறிவிட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி, முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

தனது மைத்துனர் வீட்டில் வருவாய் துறையினர் சோதனை நடத்துகிறார்கள் என்பது தெரிந்திருந்தும், கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல், மூன்று தள்ளி உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அரசு ஆட்டத்தை துவங்கிவிட்டது. இன்றைக்கு வருவாய் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே வந்து சோதனை நடத்துவார்கள். அவரின் உறவினர்கள், பினாமி வீடுகளிலும் சோதனை நடத்துவார்கள்.

திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் கொஞ்ச நாளைக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காமல் இருப்பதே நல்லது என்று கூறியவாறே கலைந்து சென்றதாக நெடுஞ்சாலை நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்…

வருவாய் துறை அலுவலர்கள் சோதனை நடத்திய வெங்கடேஷுக்கு சொந்தமான இல்லம் மற்றும் கேபிள் டிவி நிறுவன அலுவலகம்…