Mon. Nov 25th, 2024

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மாநில உயர்நீதிமன்றங்களின் செயல்பாடு, உரிமை மற்றும் அதிகார ஆள்வரை ஆகியவற்றைப் பறிக்கும் வகையிலான ஒரு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்ற பதிவு பெற்ற வழக்குரைஞர் சங்கமும், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கமும் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளித்துள்ளது.

அதில், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களை மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 217க்கு எதிரானது.

ஒரு மாநில நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியாகவே அமையும்.

ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் தொழில் புரியாத ஒரு வழக்குரைஞரை, மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது.

அவ்வாறு முயற்சிப்பது, உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கின்ற முயற்சியே ஆகும்.

இத்தகைய முயற்சி, மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களின் வாய்ப்புகளை தட்டி பறிப்பதாகும்.

இந்தி பேசாத மாநிலங்களில், இந்திக்காரர்களைக் கொண்டு வந்து அதிகாரத்தில் உட்கார வைக்க முயற்சிப்பதும் ஒரு இந்தித் திணிப்பே ஆகும். இது தமிழக நலனுக்கு எதிராக அமையும்.

இத்தகைய கோரிக்கையை, உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ ஏற்றுக்கொள்ளக் கூடாது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர்,வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையல் குறிப்பிட்டுள்ளார்.