Sun. Apr 20th, 2025

காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தருமபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை இன்று காலை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், சென்னைக்கு அழைத்து வந்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கிரைம் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் மதனின் மனைவி கிருத்திகாவின் பெயரில் யூடியூப் இயங்குவதும், அவர் அதன் பங்குதாரர் என்பதாலும் கிருத்திகாவை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்டார்.

தருமபுரியில் கைது செய்யப்பட்ட மதன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதற்கிடையே, ஆபாசமாக விடியோ பதிவிட்டு ரூ.5 கோடி அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பதாகக் கூறப்படும் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக இன்று முழுவதும் மதனிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

159 புகார்கள்….

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை பிரைவேட் சர்வர் மூலமாக விளையாடி, அதை யூடியூப் வலைதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வந்துள்ளார் மதன். இவரது யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். அதில் பெரும்பாலானோர் ‘பப்ஜி’ விளையாட்டால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக மதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுவரை இவர் மீது 159 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.