முழுநேர இயக்குநர் தலைமையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
……………………………………………………….
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நடுவண் அரசின் கல்வி அமைச்சகத்தின் மொழிப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். 2004ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த பின்னர் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்மொழி மேம்பாட்டுக்கான மையத் திட்டம் (Central Plan Scheme for Classical Tamil) நடுவண் அரசால் அமைக்கப்பெற்று மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் (CIIL) ஒப்படைக்கப்பட்டது. அதனால் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது.
திட்டத்தின் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்றினைச் சென்னையில் நிறுவுவதென 2007 ஆகஸ்டு 13ஆம் நாளன்று முடிவு செய்யப்பட்டது.
2007 ஆகஸ்டு 18ஆம் நாள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பெற்றது. 2008ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னைக் காமராசர் சாலையிலுள்ள பாலாறு இல்லத்தில் செயல்படத் தொடங்கியது.
2009 சனவரி 21 அன்று தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் (1975) 27 பிரிவு 10இன் கீழ் செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. (பதிவு எண். 1/2009)
பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இடமாற்றம் செய்யப்பட்டு 2012ஆம் ஆண்டு மே மாதம் முதல் தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
செம்மொழி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இந் நிறுவனத்திற்கென நிரந்த இயக்குநர் நியமிக்கப்படாமலேயே கூடுதல் பொறுப்பு என்ற நிலையில் தமிழ்த் துறை அல்லாத பலரையும் மத்திய அரசு நியமித்து வந்தது.
பக்கத்து வீட்டுக்காரரிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனால் அவரால் எந்தளவு பார்த்துக்கொள்ள முடியுமோ அந்த அளவில்தான் பொறுப்பு இயக்குநர்களின் செயல்பாடுகள் இருந்தன.
இந்நிலையால் ஏராளமான இழப்புகளையும், விமர்சனங்களையும் செம்மொழி நிறுவனம் எதிர்கொண்டது.
இந்த நிலையில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களை முழுநேர இயக்குநராக நடுவண் அரசு நியமித்தது.
15.06.2020 அன்று இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
செம்மொழி நிறுவனம் முழுநேர, தமிழ்த்துறை சார்ந்த இயக்குநரைப் பெற்று ஓராண்டு நிறைவுற்றிருக்கிறது.
இந்த ஓராண்டு காலத்தில்
பல ஆண்டுகளாகத் தேக்கமுற்றுக்கிடந்த நிர்வாகப் பணிகள் முடிக்கிவிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. ஆய்வுப் பணிகளும் செம்மாந்து நடைபெறும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வு நிறுவனமாயினும் அங்கு நிர்வாகப் பணிகளும் சீராக நடைபெற வேண்டுமல்லவா?
சீராக நடைபெற்று முடிக்கப்படாமலிருந்த பணிகள் பல இந்த ஓராண்டு காலத்தில் முடிக்கப்பட்டுள்ளன
இயக்குநர் பொறுப்பை ஏற்றகாலம் பெருந்தொற்று காலமாக இருந்ததால் நிறுவன ஆட்சிக்குழுவைக் கூட்ட முடியாமல் இருந்தது.
இந்தச் சூழலை திறனுடன் எதிர்கொண்டு பல ஆண்டுகளாகக் கூட்டப்படாமலிருந்த 6ஆவது நிறுவன ஆட்சிக்குழுக் கூட்டத்தை 01.08.2020 அன்று சுற்றோட்ட முறையில் நடத்தி (Circulation) நிலுவையிலிருந்த 2016-2017 மற்றும் 2017-2018ஆம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மத்திய தணிக்கைக் குழு இந்த இரண்டாண்டு கணக்குகளையும் தணிக்கை செய்து அறிக்கை அளித்தது. இந்தத் தணிக்கை அறிக்கை நடுவண் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
உரிய காலத்தில் கணக்குத் தணிக்கை அறிக்கை சமர்பிக்கப்படாமலிருந்த காரணத்தால் வேண்டிய நிதியைப் பெறமுடியாமல் இருந்தது. அதற்குரிய தீர்வை ஆட்சிக் குழுக் கூட்டத்தின் மூலமாகத் தீர்க்கப்பட்டது.
2018-2019 & 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான நிறுவன வரவு செலவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற 18.11.2020 அன்று காணொலி மூலம் 9ஆவது நிதிக்குழுக் கூட்டமும் நடத்தப்பட்டது.
நிதிக்குழு ஒப்புதல் அளித்த 2018-2019 & 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான நிறுவன நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறவேண்டி 7ஆவது ஆட்சிக்குழுக் கூட்டமும் 06.01.2021 அன்று சுற்றோட்ட முறையில் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மத்திய தணிக்கைக் குழு 2018-2019ஆம் ஆண்டிற்கான கணக்குகளை மார்ச் 2021இல் தணிக்கை செய்தது. தேங்கிக் கிடந்த நிதிநிலை சீராக்கப்பட்டது.
2019-2020ஆம் ஆண்டிற்கான கணக்குகள் பெருந்தொற்றின் காரணமாகத் தணிக்கை செய்யாமல் இருந்து வந்த நிலையில் அதற்குரிய தணிக்கையும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமிலிருந்த குறுந்திட்டப் பணிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் ஒளி/ஒலிக் காட்சித் திடங்களுக்கான கணக்குகளை விரைவாக முடித்து அந்த அறிக்கை நடுவண் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் வேண்டிய நிதியைப் பெறுவதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது.
2019 – 2020ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருதுகளுக்கான விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டமும் செப்டம்பர் 2020இல் நடத்தப்பெற்றது.
2009ஆம் ஆண்டில் தன்னாட்சித் தகுதி பெற்ற செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் புறநிலை வல்லுநர் குழு ஒன்றினால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டுத் தர நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக இப்பணியினை மேற்கொள்ளாமல் விடுபட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதற்குரிய பணிகள் முடிக்கப்பட்டு அந்த அறிக்கை நடுவண் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குத் தமிழக அரசு, சென்னை, சோளிங்கநல்லூர் வட்டம், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் 16.586 ஏக்கர் நிலத்தை 2007இல் வழங்கியது, அந்நிலத்தில் மத்திய அரசின் ரூ. 25,45,47,000/- நிதி ஒதுக்கீட்டில் நான்கு அடுக்குகள் கொண்ட கட்டடப்பணி 2017 மார்ச்சு முதல் நடைபெற்று வந்தது. இப்பணி விரைந்து நடைபெறாமல் தொய்வடைந்திருந்த நிலையில் அக்டோபர் 2020 முதல் தொடர் நடவடிக்கையால் வேண்டிய எஞ்சிய நிதியைப் பெற்றுத் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து திறப்பு விழாவினை நோக்கி உள்ளது.
நூல்கள் வெளியீடு
மாத்திற்குக் குறைந்தது ஐந்து நூல்களையேனும் வெளியிடுதல் எனும் நோக்கத்தைக் கொண்டு ஏற்கனவே நிலுவையிலுள்ள நூற்பணிகளையெல்லாம் முடித்து வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்குரிய நிதியுதவியையும் மத்திய அரசு வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
உலகளாவிய சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தொல்காப்பியம், புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய ஐந்து நூல்களும் அச்சிடப்பட்டு வெளியிடத் தயாராகவுள்ளன.
குறுந்திட்டத்தின் மூலமாக வரப்பெற்றுள்ள ஆய்வறிக்கைகளெல்லாம் நூல்களாக வெளியிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதுபோல மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலமாகவும், குறுந்திட்ட ஆய்வுகள் மூலமாகவும் வரப்பெற்றுள்ள செவ்வியல் நூல்களுக்கான மொழிபெயர்ப்புகளையெல்லாம் நூலாக வெளியிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் திருக்குறளை இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, உருது, அரபி,நேபாளி,பாரசீகம்,வாக்ரிபோலி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.
கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, ஆசாரக்கோவை ஆகிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களும், பரிபாடல், அகநானூறு, பதிற்றுப்பத்து முதலான எட்டுத்தொகை நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் கன்னட மொழிபெயர்ப்புகள் மற்றும் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு நூல்களின் இந்தி மொழிபெயர்ப்புகள் விரைவில் வெளிவர உள்ளன.
தொல்காப்பியம் – மலையாளம், குறுந்தொகை – பிரெஞ்ச், சிங்களம், நற்றிணை – பிரெஞ்ச், ஐங்குறுநூறு – மலையாளம், நாலடியார் – பிரெஞ்ச் முதலான மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடுவதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
செம்மொழித் தமிழ் பன்னாட்டு ஆய்விதழ்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இதழாகச் செம்மொழித் தமிழ் பன்னாட்டு ஆய்விதழ் (International Journal of Classical Tamil Research (IJCTR) ஒன்றை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விதழ் செம்மொழித் தமிழாய்வுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், ஆராய்ச்சி அடிப்படையிலான தரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கும், ஊக்குவிப்பதற்குமான இதழாக வெளிவரும்.
செவ்வியல் நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள்
செம்மொழித் தமிழுக்கு ஆதாரமாக உள்ள 41 நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகளை ஆவணப்படுத்திச் செம்மொழித் தமிழாய்வு நிறுவன இணையத்தளத்தில் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வித் திட்டம் இணையவழியாகச் செம்மொழித் தமிழ்க் கல்விக்குரிய சில பாடத்திட்டங்கள் எழுதி முடிக்கப்பட்டு நிறுவன இணையத்தில் வெளியிடும் பணியும் நடைபெற்று வருகின்றது.
செய்தி மடல்கள்
நிறுவனத்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ‘செம்மொழி’ எனும் செய்திமடல் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும் என்னும் நோக்கில் நிலுவையிலிருந்த செய்திமடல் பணிகள் முடிக்கப்பட்டுத் தற்பொழுது நான்கு இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 2020 வரையிலான 9 இதழ்களைத் தொடர்ச்சியாக வெளியிடத் திட்டமிட்டு அதற்குரிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜூலை 2021 இல் இந்த இதழ்கள் அனைத்தும் வெளியிடப்பட உள்ளன.
பயிலரங்குகள்
செம்மொழி நிறுவனச் செயல் திட்டங்களை வளப்படுத்தவும் செவ்வியல் ஆய்வுகளை மேம்படுத்தவும் தொல்காப்பியப் பயிலரங்கம் (22.03.2021 – 28.03.2021), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்புப் பயிலரங்கம் (08.04.2021 – 12.04.2021), தமிழ்ச் செவ்வியல் நூல்களின் பதிப்பு நெறிமுறைகள் பயிலரங்கம் (15.04.2021 – 19.04.2021) ஆகிய மூன்று பயிலரங்கங்கள் நடத்தப்பெற்றுள்ளன.
திருக்குறள் மொழிபெயர்ப்பு
மத்திய கல்வி அமைச்சகம் திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன்வழி இந்தி, மலையாளம், உருது, மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, ஏனைய பட்டியல் மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டிய பணிகள் நடைபெற்று வருகின்றன
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஏற்கனவே பஞ்சாபி (2012), மணிப்புரி (2012), தெலுங்கு (2014), கன்னடம் (2014), குஜராத்தி (2015) மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது. 18 ஆங்கில மொழிபெயர்ப்புகளின் தொகுப்பாக (A Compendium of Tirukkuṟaḷ) திருக்குறள் மொழிபெயர்ப்புப் பதிப்பையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தற்பொழுது உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற நோக்கில் ஐரிஷ், தாய், மலாய் முதலான 10 அயலக மொழிகளிலும், போடோ, சிந்தி, மைதிலி முதலான 10 பட்டியல் மொழிகளிலும் படகா, போஜ்புரி, மால்டோ முதலான 66 பட்டியலில் இடம்பெறாத இந்திய மொழிகளிலும் ஆக மொத்தம் 86 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் திட்டத்திற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம்
தமிழ் இலக்கியத்திற்குப் பௌத்தத்தின் பங்களிப்பு தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட பிற நன்மைகளை விட மிகவும் மதிப்புமிக்கது. துரதிர்ஷ்டவசமாக, தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் பல மதிப்புமிக்க பௌத்த படைப்புகள் மீட்க முடியாத அளவிற்கு அழிந்துபோயுள்ளன. மணிமேகலை அவற்றிற்கு விதிவிலக்காகத் தப்பிப் பிழைத்துள்ளது. பௌத்த சமயத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் நாட்டினருக்குத் தமிழில் பௌத்த சமயப் பெரும்காப்பியம் ஒன்றிருப்பதை அறியச் செய்யும் வகையில் பௌத்த சமயம் வழங்கும் நாடுகளிலுள்ள மலாய், இந்தோனேசியா, சீனம், சிங்களம், தாய், ஜப்பான் உள்ளிட்ட 18 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரத்திற்கு அடுத்த நிலையில் இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலையின் சிறப்பை உலகம் அறியும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலமாக வாய்க்கப்பெறும்.
இந்திய மொழிகளில் ஏனைய செவ்வியல் நூல்கள்
கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் கூறுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருவதை ஆய்வுலகம் அறியும். இதற்கேற்ற வகையில் பத்து முதன்மைத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் 41 செவ்வியல் தமிழ் நூல்களையும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல் என்பது ஒரு திட்டமாகும்.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், சமஸ்கிருதம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கும் பணிகள் இத்திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பில் தமிழ் மூலம், ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, கலைச்சொல் அகரமுதலி, முதற்குறிப்பகராதி ஆகியவை இடம்பெறும். இந்தச் செம்மொழித் தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்புத் திட்டத்தை முழுமையாக்கம் செய்யும் வகையில் செவ்வியல் நூல்களை மொழிபெயர்க்க உரிய மொழி வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு உதவித்தொகைகள்
சில ஆண்டுகளாக விளம்பரம் வெளியிடப்படாமலிருந்த முனைவர் பட்ட ஆய்வு உதவித் தொகை, முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகைகள் வழங்கத் தகுதி வாய்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெற விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்படாமலிருந்த உதவித் தொகைகளையும் வழங்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செம்மொழித் தமிழுக்கான குடியரசுத்தலைவர் விருதுகள் (2020-2021)
செம்மொழித் தமிழுக்கான குடியரசுத்தலைவர் விருதுகள் – தொல்காப்பியர் விருது (1), குறள் பீடம் விருது (2), இளம் அறிஞர் விருது (5) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகள் வேண்டி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
பணியாளர் நலன்
பணியாளர் நலன் சார்ந்து இவரெடுத்துள்ள முடிகள் இதுவரையில் எந்த பொறுப்பு இயக்குநரும் எடுத்திறாத நன்முடிவுகளாகும்.
அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கடப்பாடுடைய மூன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
- பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தினக் கூலிகளாக இருந்தவர்களைத் தொகுப்பூதிய நிலைக்கு மாற்றியது.
- பல ஆண்டுகளாக நிலவிவந்த ஊதிய முரண்பாட்டைச் சீர்படுத்தியது.
- இதுவரையில் செயல்படுத்தப்படாமலிருந்த ஊழியர் சேமநல நிதித் திட்டத்தை (EPF) நடைமுறைப்படுத்தியது.
அலுவல் பணி, ஆய்வுப் பணி, பணியாளர் நலன் சார்ந்த பணிகள் எனப் பல நூறு பணிகளை ஓராண்டு காலத்தில் செய்து முடித்துள்ள இயக்குர் பெருந்தகைக்குத் தமிழ் ஆய்வாளர்கள் சார்பிலும், செம்மொழி நிறுவனப் பணியாளர்கள் சார்பிலும் இதயம் நிறைந்த நன்றியை உரித்தாக்கி வருகிறார்கள்…